

கச்சத்தீவை மீட்போம் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் மு.லோகநாதனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியது:
ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பதற்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் முழுமையாக தடை செய்ய வேண்டும். மக்கள் பணம் வாங்காமல் ஓட்டுப் போட வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்கள் நம்பிக்கையோடு எங்களை பார்க்கின்றனர்.
கச்சத்தீவை மீட்போம் என்பது ஏமாற்று வேலைதான். அதை பிறகு பார்ப்போம். அதற்கு வேறு வழி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கச்சத்தீவை மீட்போம் எனக் கூறுகிறார். ஆனால், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கொடுத்தது கொடுத்தபடியே இருக்கட்டும் என்பது போல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.