

மக்கள் நலன் சார்ந்த இயக்கமாக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தமாகா செயல்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம் தேவை என்ற கொள்கை முழக்கத்துடன் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து களமிறங்கிய தமாகாவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
மக்களின் இந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கிறோம். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள அதிமுகவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுகவின் பணபலத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. ஜனநாயகத்தை விலைபேசுவதை சில கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
மாற்றம் தேவை என்ற முழக்கத்தை இந்தத் தேர்தலில் முன் வைத்தோம். மாற்றத்தை மக்கள் விரும்பவில்லை. வாக்காளர்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
மக்கள் நலன் சார்ந்த இயக்கமாக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தமாகா செயல்படும்'' என்று வாசன் கூறினார்.