Published : 01 Jun 2022 06:02 AM
Last Updated : 01 Jun 2022 06:02 AM
திருவண்ணாமலை: ஆரணியில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் குப்பை கூடையை தலையில் சுமந்து வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் பங்கேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் ஏ.சி. மணி (திமுக) தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி முன்னிலை வகித் தார். அப்போது, குப்பை கூடையை தலையில் சுமந்தபடி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 21-வது வார்டு கவுன்சிலர் பவானி கிருஷ்ணகுமார் பங்கேற்றார். பின்னர், குப்பை கூடையை நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் முன்பு வைத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும், அவர் பேசும்போது, “தனது 21-வது வார்டில் கடந்த 2 மாதங்களாக துப்புரவு பணி மேற்கொள்ளப்படவில்லை. அம்பேத்கர் நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் குப்பை குவிந்துள்ளன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றக்கோரி, நகராட்சி ஆணை யாளரிடம் முறையிட்டும் நட வடிக்கை எடுக்கவில்லை. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், எனது வார்டு பகுதியை நகராட்சி அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க மறுக்கின்றனர்” என குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி பேசும்போது, “21-வது வார்டில் உள்ள குப்பைகளை 2 நாட் களில் அகற்றப்படும்” என உறுதி அளித்தார். அதன்பேரில் போராட் டம் முடிவுக்கு வந்தது.
அசைவ உணவகங்களில் ஆய்வு
இந்நிலையில், ஆரணி நகரில் உள்ள அசைவ உணவகம் மற்றும் பாஸ்ட் புட் கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுகளால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 27-வது வார்டு கவுன்சிலர் ஜெயவேல் குற்றஞ்சாட்டினார்.
அப்போது அவர் பேசும்போது, “ஆரணி நகராட்சியில் உள்ள அசைவ உணவகத்தில் விற்பனை யான தரமற்ற உணவை சாப்பிட்ட சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இப்போது, மற்றொரு அசைவ உணவகத்தில் சிக்கன் சாப்பிட்டு 17 வயது மாணவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே, ஆரணி நகரில் உள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும்” என்றார். அவரது கோரிக்கைக்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி, “ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் தலைமையில் குழு அமைத்து, அசைவ உணவகங்கள் மற்றும் பாஸ்ட் புட் கடைகளில் ஆய்வு செய்யப்படும். தரமற்ற உணவு விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT