Published : 01 Jun 2022 12:05 AM
Last Updated : 01 Jun 2022 12:05 AM

கப்பற்படை அதிகாரி ஆன நீலகிரியைச் சேர்ந்த படுகர் சமூகப் பெண்

கப்பற்படையில் சப்- லெப்டினட்டாக தேர்வாகியுள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படுகர் சமூகப் பெண் மீரா

உதகை: நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகே உள்ள கேத்தி கிராமத்திலுள்ள படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மீரா என்பவர் கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (23). ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக இருந்த ரவீந்திரநாத், வெலிங்டன் மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக பணி மாறுதலாகி செல்லும் ஊர்களுக்கு எல்லாம் மகள் மீராவை அழைத்துச் சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்க வைத்துள்ளார். இவர் கோவையில் பணிபுரிந்த போது மகள் மீராவை அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார். இந்நிலையில், மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.

இதற்காக அவர் கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தேர்வை எழுதினார். அதில் மீரா கப்பல் படைக்கான பிரிவில் தேர்ச்சி பெற்றார். இதனைத்தொடர்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 6 மாதம் அங்கு பயிற்சி நடைபெற்றது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் மீரா விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக தலைமை ஏற்க உள்ளார்.

பயிற்சியை முடித்த மீரா பெற்றோருடன், தனது சொந்த ஊரான நீலகிரியில் உள்ள அச்சனக்கல்லுக்கு வந்தார். அங்கு அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இதுகுறித்து மீரா கூறியதாவது: "எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை சிறு வயதிலேயே இருந்தது. அதற்கேற்ப கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தியை முதன்மையான மொழியாக கொண்டு படித்ததால் எனக்கான பயிற்சிகள் எளிமையாக இருந்தது. தற்போது கண்ணூரில் உள்ள தேசிய கப்பல் படை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சியை முடித்துள்ளேன். இதை தொடர்ந்து சப்-லெப்டினென்ட் என்ற கப்பல் படை அதிகாரி பதவி வழங்கப்பட்டு கொச்சியில் உள்ள கப்பல் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன்" என்றார்.

ராணுவ பணி என்றாலே பெண்களுக்கு அதிகளவில் விருப்பம் இருக்காது, நீலகிரி போன்ற மலை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகளவில் இருக்காது என்பதையெல்லாம் தகர்த்துள்ளார் மீரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x