

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் மதிமுக வேட்பாளர் நிஜாமை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் இருந்தபோது செய்யாததை இனிமேல் செய்யப்போவதாக தேர்தல் அறிக்கைகளில் தெரிவித்திருப்பது முரண்பாடாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் பூரண மதுவிலக்கு கோரிய சசிபெருமாள் உயிரிழந்தார். ஆனால் கடந்த 5-ம் தேதி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் சென்னையில் மதுக்கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறுகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை வாங்குவதற்காக ஜெயலலிதா இவ்வாறு கூறுவது அதிமுகவின் சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அனைவரிடமும் பணம் வாங்கிக்கொண்டுதான் பணியிடங்கள் நிரப்பப்பட்டி ருக்கின்றன.
தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். அதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாத மாற்று அணி ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெறும் என்றார் அவர்.