

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெய குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, ராஜவீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
இந்த தேர்தலை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. அநியாயம், அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை நிலைநாட்டுவதற்கான தேர்தல். காட்டில் இருக்கும் பெண் யானை மதம் பிடித்து தறி கெட்டு ஓடும்போது அதனை அடக்க கும்கி என்ற ஆண் யானை வேண்டும். அந்த கும்கி யானைதான் காங்கிரஸ் - திமுக கூட்டணி. ஆனால், ஓநாயும், முள்ளம்பன்றியும், நரியும் கும்கி யானையை அடக்கப் போகிறேன் என புறப்பட்டுச் செல்வது வேடிக்கையாக இருக்கிறது.
இவர்கள் ஜெயலலிதாவை வெல்ல முடியுமா என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள். அவர்கள் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 6 பேர் சேர்ந்து நிற்கிறார்கள். பொய் சொல்லியே ஆட்சியை பிடித்த கட்சியான பாஜக சார்பில் ஒரு அம்மையார் இந்த தொகுதியில் நிற்கிறார். அவர் எப்போதுமே சென்னையில் இருப்பவர். டிவிகளுக்கு சென்று பேட்டி கொடுக்கவே அவருக்கு நேரம் போதாது. மத்தியில் ஆளும் மோடியும், இங்கு ஆளும் லேடியும் எதையும் செய்யவில்லை.
யானைகள் மீது காட்டும் அன்பையும், பாசத்தையும் மக்கள் மீது அவர் காட்டுவது கிடையாது. இதைச் சொன் னால் யானையையும், ஜெய லலிதாவையும் ஒப்பிட்டு பேசு கிறார்கள் எனக் கூறி எனது கொடும்பாவியை எரிக்கிறார்கள். நீங்கள் ஒப்பிட்டு நினைப்பதற்கு நான் என்ன செய்ய முடி யும். எரித்தால் எரித்துக்கொள் ளுங்கள்.
அரசியலில் மாலையும் விழும், அதே நேரத்தில் செருப்பும் விழும், சாணியும் விழும் என் பதை அறிந்தவன் நான். என் மீது செருப்பை வீசினால் 2 செருப்பாக வீசுங்கள். எப் போதும் மாலைகளே விழ வேண்டும் என நினைப்பவன் நான் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ஆளுநரின் அவதூறு வழக்கு
நீலகிரி மாவட்டம் உதகை தொகுதியில் போட்டியிடும் காங் கிரஸ் வேட்பாளர் ஆர்.கணே ஷுக்கு ஆதரவாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அங்கு இளங்கோவன் பிரச்சாரம் மேற் கொண்டார். பின்னர் நிருபர் களிடம் அவர் கூறியதாவது:
தேர்தல் பார்வையாளர்கள் அதிமுகவுக்கு சாதகமாகப் பணியாற்றுகின்றனர். தேர்தல் பணி செய்யாமல் இவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் மூலமே ஆளுங்கட்சி பணத்தை சேர்க்கின்றது. தமிழக ஆளுநர் எனக்கு எதிராகத் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை எதிர் கொள்வேன். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.