உலகத்தரம் வாய்ந்தவையாக அரசுக் கல்லூரிகள் விளங்கும்: பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெ.காளிராஜ் உறுதி

உலகத்தரம் வாய்ந்தவையாக அரசுக் கல்லூரிகள் விளங்கும்: பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெ.காளிராஜ் உறுதி
Updated on
1 min read

திருப்பூர்: 2047-ம் ஆண்டில் உலகத்தரம் வாய்ந்த கல்லூரிகளாக அரசுக் கல்லூரிகள் விளங்கும் என பல்லடத்தில் நடைபெற்ற அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெ.காளிராஜ் பேசினார்.

பல்லடத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவை மண்டல கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் இரா.உலகி வரவேற்றார். பல்லடம் அரசு கல்லூரி முதல்வர் ஆ.முனியன் முன்னிலை வகித்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெ. காளிராஜ் பேசியதாவது: அரசுக் கல்லூரி படிப்பும் அங்கு கிடைத்த உதவித்தொகையும்தான் என்னை துணைவேந்தர் ஆக்கியது. அரசுக் கல்லூரியில் படிக்க வைக்க பெற்றோர் சிலர் தயங்குகின்றனர். எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் மூலமே மக்களுக்கு உயர்கல்வியை கொண்டு செல்ல முடியும் என்பது தற்போது புரிகிறது. நாட்டின் 100-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில், நாம் எப்படி இருக்க போகிறோம் என்பதை நம்முடைய பொருளாதார முன்னேற்றம் தீர்மானிக்கும். அதில் அரசு கல்லூரி மற்றும் அரசுப் பள்ளிகள் முக்கிய பங்காற்றும்.

அரசுக் கல்லூரிகளை 100 சதவீதம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு கல்லூரியில் 3 ஷிப்ட் அடிப்படையில் மாணவர்கள் படிக்கும்போது, 200 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 2047-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த கல்லூரிகளாக அரசுக் கல்லூரிகள் விளங்கும். அரசுக் கல்லூரியில் படித்த மாணவர்கள், கிடைத்த வாய்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்தினால் விரும்பிய உயரத்துக்கு செல்லலாம். வாழ்வில் கல்லூரி படிப்பு 10 சதவீதம் தான். வாழ்க்கையில் நேரடியாக கிடைக்கும் அனுபவம்தான், மனிதனை முழுத்திறனுள்ளவராக மாற்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கவிஞர் கவிதாசன் உட்பட கல்லூரி பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இளங்கலை மாணவர்கள் 380, முதுகலை மாணவர்கள் 5 பேர் என 385 பேருக்கு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டங்களை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in