திருடர்களை அடையாளம் காட்டிய சிறுவன் மர்ம மரணம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

திருடர்களை அடையாளம் காட்டிய சிறுவன் மர்ம மரணம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
Updated on
1 min read

வீட்டில் திருடிய திருடர்களை அடையாளம் காட்டிய 12 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்த வழக்கின், அனைத்து விசாரணை ஆவணங்களையும் பள்ளிக்கரணை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பூ வியாபாரியான செல்வி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் விதவை. பூ விற்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எனது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், எனது 12 வயது மகன் சரவணனை கத்தி முனையில் மிரட்டி வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸாரிடம் எனது மகன் திருடர்கள் 3 பேரை அடையாளம் காட்டினான். ஆனால் போலீஸார் அவர்களை கைது செய்யவில்லை.

இந்நிலையில், மீண்டும் அவர்கள் வீடுபுகுந்து எங்களை மிரட்டிச் சென்றனர். எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கூறி போலீஸ் ஆணையரிடம் மனு கொடுத்தேன். கடந்த 2015, ஜனவரி 10-ல் பள்ளிக்குச் சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜனவரி 12-ம் தேதி எனது மகன் பள்ளிக்கரணை ஏரியில் சடலமாக மிதப்பதாக போலீஸார் தகவல் தந்தனர்.

எனது மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. திருடர்களை கைது செய்ய வேண்டிய போலீஸார், திருடர்களை வைத்தே எனது மகனை அநியாயமாக கொலை செய்துள்ளனர். இதுவரை போலீஸார் கொலையாளிகளை கைது செய்யாதது குறித்து மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் செய்தேன். போலீஸ் இணை ஆணையர் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, சிபிசிஐடி அல்லது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ஆர்.மாலா, ‘‘இந்த வழக்கின் அனைத்து விசாரணை ஆவணங்களையும் வரும் ஜூன் 11-ம் தேதிக்குள் பள்ளிக்கரணை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in