Published : 31 May 2022 06:00 AM
Last Updated : 31 May 2022 06:00 AM
சென்னை: யாரும் கவனிக்கவில்லை என வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீற வேண்டாம். விதிமீறல் வாகனங்களை நவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து, அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தவறான வழியில், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார்களை இயக்குபவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்படி 1.05.2022 முதல் 22.05.2022 வரையிலான காலகட்டத்தில், தவறான திசையில் வாகனம் ஓட்டியதாக 22,990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் கூறும்போது, “சென்னையில் 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து போலீஸாரை நியமித்து கண்காணிப்பது கடினம். எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளைப் பின்பற்றி விபத்துகள் மற்றும் வாகன நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சென்னையில் ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, வேப்பேரி, அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, யானைகவுனி உட்பட 11 சாலை சந்திப்புகளில் தற்போது 15 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த கேமராக்கள் விதிமீறல் வாகனங்களைக் கண்காணித்து படம் பிடிக்கிறது. அதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத ரசீது அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்து கொண்டு சாலை விதிகளை மீற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT