

‘அதிமுக திமுக கட்சிகளுக்கு மாற்றாக மதச்சார்பற்ற ஆட்சியை அளிக்கக் கூடிய கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி விளங்கி வருகிறது,’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலா ளர் தா.பாண்டியன் கூறியதாவது:
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் நிதி பரிவர்த்தனை குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆயிரம் கோடியாக இருக்க வேண்டிய பணப்புழக்கம், 60 ஆயிரம் கோடியாக உள்ளது. ஐந்து மடங்கு அதிகமாக பண புழக்கம் இருப்பதால், பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆறு மாதத்தில் கலால் வரி ஏழு முறை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யப்படும் சூழலில், இந்திய மதிப்பில் அதன் மதிப்பை கணக்கிடாமல் டாலர் மதிப்பில் கணக்கிடுவது குறித்து, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி-க்கள் அத்தனை பேர் இருந்தும், ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. பகுத்தறிவு எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் இந்தியாவில் அதிகளவு கொலை செய்யப்படும் நிலையே உள்ளது. இதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
அதிமுக - திமுக மாற்றாக மதச்சார்பற்ற ஆட்சியை அளிக்க கூடிய கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி விளங்கி வருகிறது.
மக்களுக்கு இலவசங்களும், பல்வேறு அரசு நிதி உதவியும் அவர்களின் வரி பணத்தில் இருந்தே வழங்கப்படுகிறது. திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகள் அவர்களை பலப்படுத்தி கொள்ள, இதுபோன்ற திட்டங்களை அளிக்கின்றனர். அதிமுக, திமுக சார்பில் நடத்தப்படும் மது ஆலைகளை மூடிவிட்டு, அவர்கள் மது விலக்கு கொள்கை சம்பந்தமாக பேச வேண்டும். தாது மணலை அரசே ஏற்று நடத்தும் போது, அரசுக்கு வருவாய் பல மடங்கு பெருகும்.
தமிழகத்தில் 5.36 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், சில நூறு பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்துவது பித்தலாட்டம். கருத்துகணிப்பு துல்லியமான முடிவை அளிப்பதில்லை, அதற்கு பதிலாக பொய்யான முடிவையே தெரிவிக்கின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மக்கள் நலக்கூட்டணி குறித்து அநாகரீகமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில், திமுக கூட்டணி இருந்த போது தான், 2ஜி அலைக்கற்றை ஊழல் நடந்தது. இவர்களின் கூட்டணி, தர்மத்துக்கு எதிரான கூட்டணியாகவே உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.