

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் பிரபல ஃபோர்டு (FORD) கம்பெனியை ஜூன் 20-ம் தேதி நிரந்தரமாக மூடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பெனி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
போராட்டம் தொடங்கிய ஆரம்பகால கட்டத்தில் உங்களுக்கான செட்டில்மென்ட் முறையாக சீனியர், ஜுனியர் (சர்வீஸ்) அடிப்படையில் வழங்கப்படும் என கம்பெனி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் அதற்கான உத்தரவாதம் அளிப்பதாக எந்த ஓர் உறுதியும் அளிக்கப்படவில்லை
இதற்கிடையே, நிறுவன ஊழியர்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு தொடர்ந்து இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை உள்ளிட்டோர் கம்பெனி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊழியர்கள் தரப்பில் வைத்த கோரிக்கையின்படி மே மாத இறுதிக்குள் ஊழியர்களுக்கான செட்டில்மென்ட் செய்வதாக உத்தரவாதம் அளித்தது பற்றி இதுவரை எந்தவித உறுதியும் அளிக்கப்படவில்லை என்பதால் இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பணி செய்யக்கூடிய முதல் ஷிஃப்ட் ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதியம் 2 மணிக்கு பணிக்கு வந்த ஊழியர்களிடம் ‘இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்’ என கையொப்பம் இட்டால்மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று கூறி நிர்வாகம், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் நிறுவன நுழை வாயிலில் அமர்ந்து 1,000-க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.