

மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக திமுக, அதிமுகவைச் சேர்ந்த 18 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 375 பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம் ஆசிரியர் காலனியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக கிளைச் செயலர் காளீஸ்வரன்(51), மணி(54) ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்தூர் பெருமாள் கோயில் அருகே பணம் கொடுத்ததாக திமுக நகர துணைச் செயலர் வேலுவை பிடித்து ரூ.13,300-ஐ பறிமுதல் செய்தனர்.
திருத்தங்கல் கங்காகுளம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக நிர்வாகி பூஞ்சோலை(48)யை பிடித்து ரூ.4,500-ஐ பறிமுதல் செய்தார்.
சாத்தூர் காயிதேமில்லத் தெருவில் அதிமுக 18-வது வார்டு கிளைச் செயலர் வீரப்பன்(60) ரூ.3 ஆயிரத்துடன் பிடிபட்டார்.
திருவில்லிபுத்தூர் சின்னக்கடை பஜாரில் அதிமுகவைச் சேர்ந்த 7-வது வார்டு கவுன்சிலர் அங்குராஜ் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ.54,695-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
திருவில்லிபுத்தூர் எம்.கே.எஸ். பெட்ரோல் நிலையம் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக 12-வது வார்டு நிர்வாகி சேகர்(49) பிடித்து ரூ.73,050ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம் தாட்கோ காலனியில் அதிமுக பிரமுகர் சுந்தரம்(32) என்பவரிடம் ரூ.11,100, அதிமுக பிரமுகர்கள் பிரபாகரன் (28), சீனிவாசன் (50), இரணியன் (60) ஆகியோரை கைது செய்து ரூ.44,800-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை சத்தியவாணிமுத்து நகரில் பணம் கொடுத்ததாக அதிமுக பிரமுகர்கள் வேதமுத்து(69), பால்ராஜ்(55), பிச்சைக்கனி(47) ஆகியோரை நகர் போலீஸார் கைது செய்து ரூ.1,200, ஆத்திப்பட்டியில் திமுக பிரமுகர்கள் கேசவமூர்த்தி(60), நரசிம்மன்(32) ஆகியோரை போலீஸார் கைது செய்து ரூ.3,500-ஐ பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தங்கமுத்து(57) என்பவரை போலீஸார் கைது செய்து ரூ.12ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (57). இவர் அ.தி.மு.க. பகுதி செயலராக உள்ளார். போலீஸார் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.66,230-ஐ கைப்பற்றி பழனிச்சாமியைக் கைது செய்தனர். கொடைக்கானல் ஒன்றிய துணைச் செயலாளர் பொன்னுத்துரை. இவர் நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். பள்ளங்கி கிராமம் அருகே துணை ராணுவப் படையினர் காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் ரூ.1.90 லட்சம் இருந்தது தெரியவந்தது. ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த துணை ராணுவப் படையினர் வட்டாட்சியர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.