Published : 11 May 2016 12:44 PM
Last Updated : 11 May 2016 12:44 PM

மக்களை சந்திக்காத முதல்வர் ஜெயலலிதா: ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

மக்களை சந்திக்காத, மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியாதவர் முதல்வர் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் கே.சுப்பிரமணியனை ஆதரித்து கரூரில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியது: இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் தோல்வியை வழங்க வேண்டும். வாக்கு சேகரிக்கச் செல்லும் அதிமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்கிறார் ஜெயலலிதா. ஏன் கடந்த 5 ஆண்டுகளில் இதை செய்யவில்லை? இனி அவர் முதல்வராக முடியாது. முதல்வராக இருக்கும்போதே 2 முறை சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் சிறை செல்வது உறுதி. யானையின் மீது காட்டும் பரிவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் காட்டாதவர் ஜெயலலிதா.

காவிரி, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்சினை என எதற்கும் தீர்வு காணாத அவர் மீண்டும் முதல்வரானால் தமிழகம் நரகமாகிவிடும். மதுவால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டனர். மக்களை சந்திக்காத, மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியாத ஜெயலலிதா ஆட்சியில், ஏழை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக் கவில்லை. அமைச்சர்களை அவர் கொத்தடிமைபோல நடத்துகிறார். மின்வெட்டைப் போக்குவதற்காக கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மின் கட்டணச் சுமையை மக்கள் மீது சுமத்திவிட்டனர். இந்த அவலங்களில் இருந்து மீள, திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x