

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு பொதுநல மனுக்களை பொதுமக்கள் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் வழங்கினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஏரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு, தனது கைப்பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்ற முயன்றார். அப்போது, அங்கிருந்து அரசு அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உடனே, பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உள்ளே விரைந்து வந்து ஆறுமுகம் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதையடுத்து, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவரிடம் விசாரித்தபோது, ‘‘பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள ஏரந்தாங்கல் ஏரியில் மீன் படிக்க ரூ.30 ஆயிரம் செலுத்தி ஏலம் எடுத்தேன். ஆனால், இதுவரை என்னால் அங்கு மீன் பிடிக்க முடியவில்லை.
எனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், தணிகாசலம் ஆகியோர் என்னை மீன் பிடிக்க விடாமல் அடியாட்களை கொண்டு மிரட்டுகின்றனர். ஏரந்தாங்கல் ஏரி அவர்கள் எல்லைக்கு உட்பட்டு வருவதால், ஏலம் எடுத்த என்னை மீன் பிடிக்கக்கூடாது என மிரட்டுகின்றனர்.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை, காவல் துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என பலரிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. எனவே, என் வாழ் வாதாரத்தை கேள்விகுறியாக்கிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால் தற்கொலைக்கு முயன்றேன்’’ என்றார்.
அவரை சமாதானம் செய்த ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து, சத்து வாச்சாரி காவல் துறையினர் ஆறுமுகத்தை காவல் நிலையத் துக்கு அழைத்துச்சென்று அங்கு எச்சரித்து அனுப்பினர்.
வேலூர் சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அளித்த மனுவில், ‘‘வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு ஜூன் மாதம் திறப்பு விழா காண உள்ள வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு ‘டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதி நீலகண்டன்-விஜயலட்சுமி ஆகியோர் அளித்த மனுவில், ‘‘ எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், எனது வீட்டை அபகரித்த எனது மகன் எங்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு அந்த வீட்டை விற்க முயல்கிறார். இதை தட்டிக்கேட்டால் எங்களை மிரட்டுகிறார். எனவே, எனது மகனிடம் இருந்து என் வீட்டையும், எங்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.