Published : 31 May 2022 06:02 AM
Last Updated : 31 May 2022 06:02 AM

தி.மலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் சுவாச குழாயில் சிக்கிய விக்ஸ் டப்பா: மருத்துவர்கள் அகற்றியதால் உயிர் பிழைத்த அதிசயம்

சிறுமி ஹர்ஷினி. அடுத்த படம்: சிறுமி விழுங்கிய விக்ஸ் டப்பா.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சுய நினைவு இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்ட சிறுமியின் சுவாசக் குழாயில் இருந்த விக்ஸ் டப்பாவை அகற்றி சிறப்பு மருத்துவக் குழுவினர் உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.

சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் சோபன்பாபு. தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது சொந்த ஊரான, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் உள்ள வீட்டுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இந்நிலையில், அவரது 2 வயது மகள் ஹர்ஷினி, சிறிய அளவிலான ‘விக்ஸ் டப்பா’வை வைத்துக்கொண்டு கடந்த 28-ம் தேதி இரவு விளையாடி உள்ளார்.

அப்போது, எதிர்பாராமல் டப்பாவை விழுங்கியபோது, தொண்டையில் சிக்கி கொண்டது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், விக்ஸ் டப்பாவை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வெளியே எடுக்க முடியவில்லை. அதன்பிறகு, தானிப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மறுநாள் (29-ம் தேதி) சிறுமி ஹர்ஷினியை அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர், டப்பாவை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை. இதற்கிடையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது சுவாசம் மெல்ல மெல்ல குறைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அவர், சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த, காது, மூக்கு -தொண்டை சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று, சிகிச்சையை தொடங்கினர்.

சிறுமிக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லாததால், ‘LARYNGOSCOPY’ முறையில் சிகிச்சை அளித்து, சுவாசக் குழாயில் சிக்கியிருந்த விக்ஸ் டப்பாவை வெளியே எடுத்தனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமி, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். இதற்கிடையில், சிறுமிக்கு மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, “குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். சிறிய பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவற்றை விளையாட கொடுக்கக் கூடாது. அதனை குழந்தைகள் விழுங்கும்போது, ஆபத்தாக முடிந்துவிடும். மேலும், குழந்தையின் தொண்டையில் ஏதாவது பொருட்கள் சிக்கிக் கொண்டால், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்துவது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x