Last Updated : 30 May, 2022 09:47 PM

 

Published : 30 May 2022 09:47 PM
Last Updated : 30 May 2022 09:47 PM

ஏற்காடு மலைப் பகுதிகளில் மறைந்துள்ள 75 காட்சி முனைகள்: கண்டறிந்து மீட்டெடுக்கப்படுமா?

ஏற்காட்டில் பிரமிப்பூட்டும் வகையில் பிரமாண்டமான வெள்ளை யானை நிற்பது போல் உள்ள வெள்ளை யானைக்கல் பாறை

சேலம்: ஏற்காடு மலைப் பகுதிகளில ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 80 காட்சி முனைகளில், மறைந்துள்ள 75 காட்சி முனைகளை அரசு அதிகாரிகள் கண்டறிந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. கிழக்கு மலைத் தொடரான சேர்வராயன் மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி முனைகளும், குளுமையான சீதோஷணத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறினர். கடந்த 1861-ம் ஆண்டு டக்ளஸ் ஹமில்டன் என்ற ஆங்கிலேயர் ஏற்காட்டை, சுற்றுலா தலமாக மாற்றிட, சென்னை மாகாண அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்பின்னர், 1865-ம் ஆண்டு டாக்டர் ஜன் ஷார்ட் என்பவர் ஏற்காட்டில் பார்க்க வேண்டிய காட்சி முனைகளை கண்டறிந்து அதனை புத்தகமாக வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக 1890-ம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த வில்லியம் மில்லர் சுற்றுலா தலமாக தேவையான காட்சி முனைகளை பட்டியலிட்டதை அடுத்து, அரசு அதனை ஆவணமாக வெளியிட்டது. கடந்த 1899-ம் ஆண்டு ஏற்காடு சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டு, 80 காட்சி முனைகள் பட்டியலிடப்பட்டன.

ஆங்கிலேயர் கால ஆளுகைக்குட்பட்டிருந்த ஏற்காட்டில் கிரீன் ஹில், தி ஹனி ராக், வெல்ச் பாயின்ட், லேடீஸ் போவர், டங்கன்ஸ் மலை, பிராஸ்பெக்ட் பாயின்ட், கிளியூர் நீர் வீழ்ச்சி, புலி குகை, கரடி குகை, காடஸ் ஹார்ன், சன்செட் மூக், சர்ச் பாயின்ட், சன்ரைஸ் பாயின்ட், பிளவு பா, வெள்ளை யானைக்கல், செல்கலத்துபாடி காட்சி முனை, தி கானிக்கல் ஹில், கோல்டன் ஹார்ன், லிட்டில் டஃப், கென்னடி ஃபால் உள்ளிட்ட 80 இடங்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழும் வகையிலான காட்சி முனைகளாக இருந்துள்ளன. ஆங்கிலேய அதிகாரிகள் குடும்பத்தினருடன் ஏற்காடுக்கு வந்து, காட்சி முனைகளை ரசித்து கண்டு களித்து சென்றுள்ளனர்.

மறைந்திருக்கும் காட்சி முனைகள்: நாடு சுதந்திரமடைந்ததை அடுத்து, ஆங்கிலேயர்கள் வசமிருந்த தோட்டங்கள் தனியார் முதலாளிகள் கைக்கு மாறியது. தற்போது, தனியார் காஃபி தோட்டத்தில் சில காட்சி முனைகள் அமைந்துள்ளன. வனப்பகுதிகளிலும், பல காட்சி முனைகள் பாரமரிப்பில்லாததால், எங்குள்ளது என்பது தெரியாமல் மறைந்துள்ளது.

தற்போது, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், கிளியர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், அண்ணாமலையார் கோயில், காவிரி பீக், சேர்வராயன் கோயில், கரடியூர் வியூவ் பாயின்ட், மஞ்சக்குட்டை வியூவ் பாயின்ட் உள்பட 15 காட்சி முனைகள் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று வரும் இடங்களாக உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 80 காட்சி முனைகளில், இன்றளவும் ஐந்து மட்டுமே சுற்றுலா தலப்பட்டியலில் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை: தற்போது, அரசு கூடுதலாக 10 காட்சி முனைகளை உருவாக்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஆங்கிலேயர்களின் பராமரிப்பில் இருந்து மாயமாய் மறைந்து போன 75 காட்சி முனைகளை, 45-வது கோடை விழா மலர் கண்காட்சி நடந்து வரும் வேளையில், மீட்டெடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


கண்டறியப்பட்ட 40 காட்சி முனைகள்: இதுகுறித்து அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ கூறும்போது, ‘ஏற்காட்டில் 80 காட்சி முனைகளை ஆங்கிலேயர் வரைபடங்களுடன் பட்டியலிட்டிருந்தனர். கால சுழற்சியில் 75 காட்சி முனைகள் கண்டறியாத நிலையில் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்காட்டில் மறைந்து கிடக்கும் காட்சி முனைகளை மீட்டுக்க வேண்டி காடு, மலையாக அலைந்து திரிந்து 40 காட்சி முனைகள் இதுவரை கண்டிறிந்துள்ளேன். மேலும், 35 காட்சி முனைகள் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையே நீடித்து வருகிறது. ஏற்காட்டில் மறைந்து கிடக்கும் 75 காட்சி முனைகளை அரசு அதிகாரிகள் கண்டறிந்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், மிகப்பெரும் சுற்றுலா தலமாக ஏற்காடு மாறும் என்பது நிச்சயம்’ என்றார்.

மீட்டெடுக்க நடவடிக்கை: இதுகுறித்து சேலம் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி ஜனார்த்தனன் கூறும்போது, ‘ஏற்காட்டில் 45-வது கோடை விழா மலர் கண்காட்சி கொண்டாடி வரும் வேளையில், ஆங்கிலேயரால் பராமரிக்கப்பட்ட 80 காட்சி முனைகளில் 75 காட்சி முனை காலப்போக்கில்கண்டறியப்படாமல் மறைந்துள்ளது. இதனை மீட்டெடுக்க தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், வருவாய் துறையுடன் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x