

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளது வருத்தமளிப்பதாகவும், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டணிக்கு ஒத்துழைக்காமல் இருப்பது நல்ல அரசியல் இல்லை எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 8 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை சீர்குலைந்துள்ளது. சிறுபான்மையின மக்களுக்கும், தலித் மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் விரோத அரசாக உள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றிருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும், கூட்டணி கட்சியினரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், அதையும் மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த, திருச்சி மாவட்டம்கூத்தைப்பார் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு, 3-வது முறையாக நடத்தப்பட்ட தேர்தலிலும்திமுகவைச் சேர்ந்தவரே வெற்றிபெற்றுள்ளார். திமுகவினரின் இந்த செயல் வருத்தமளிக்கிறது. இதுகுறித்து முதல்வர், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மாநில அளவில் கூட்டணி தொடர வேண்டும் என திமுக தலைமையும், தோழமை கட்சிகளும் உறுதியாக உள்ளன. ஆனால் மாவட்ட அளவில் இதற்கான ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பதுநல்ல அரசியல் இல்லை. இப்படியே போனால், எதிர்காலத்தில்அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும். கீழ் மட்ட நிர்வாகிகள் இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் கடிதத்தின் அடிப்படையில் திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.