Published : 30 May 2022 07:36 AM
Last Updated : 30 May 2022 07:36 AM
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 31) ஆய்வு செய்கிறார்.
நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை பாதுகாப்பு கருதி கடந்த 24-ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் திறந்துவிட்டார்.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக, சென்னையில் இருந்து இன்று (மே 30) மதியம் விமானத்தில் புறப்பட்டு, திருச்சிக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை வரை திருச்சியில் ஓய்வெடுக்கிறார்.
பின்னர், கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்குச் சென்று, அங்கு இரவு தங்குகிறார்.
நாளை (மே 31) காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு கல்லார், தரங்கம்பாடி, திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஆகிய பகுதிகளில் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்டம் வரும் அவர், பல்வேறு இடங்களில் தூர் வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.
பின்னர், திருச்சிக்குச் சென்று அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்கும் முதல்வர் இரவு 7 மணிக்கு விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT