Published : 30 May 2022 06:46 AM
Last Updated : 30 May 2022 06:46 AM

கரோனா கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவு வேண்டாம்: ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

திருச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்தர தீவிர சிகிச்சை பிரிவை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன், டீன் கே.வனிதா உள்ளிட்டோர். படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி: தமிழகத்தில் கரோனா கரை ஒதுங்கும் நேரத்தில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என பொதுமக்களை மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், புதிதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கரோனா தொற்று மிகக்குறைவாகவே பதிவாகி வருகிறது. ஆனால், அதேசமயம், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சமாக 22 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 வரை உயரத் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்களை ஆராயும்போது, வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால் கல்லூரிகள், விழாக்கள் மூலம் பரவுவது தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கரோனா 3 அலைகளையும் முழுமையாக வென்றுவிட்டு, இப்போது கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் இருந்துவிடக்கூடாது. தமிழகத்தில் இன்னும் 43.45 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.21 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போடாமல் உள்ளனர். எனவே மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

குரங்கு அம்மையை பொறுத்தவரை இந்தியாவிலேயே இன்னும் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை. எனவே மக்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்றார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் கே.வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x