

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு மே 1-ம் தேதி முதல் ஒரு மாத காலம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டில் நீதிமன்றங் களின் நிலை குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி கண்ணீர் விட்டு அழுதார். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால் நீதிபதி களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நீதிமன்றங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த வேண்டும் என கண்ணீர் சிந்தியபடியே அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நீதிமன்றங்களில் மலைபோல் தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக் கான வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற அக்கறை தான் தலைமை நீதிபதியை கண்ணீர் சிந்த வைத்தது. இந்த சூழலில் நீதிமன்றங்களுக்கு கோடை விடு முறை அவசியம்தானா என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கடும் கோடையின் வெப்பத்தை வெள்ளைக்காரர்களால் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று திரும்பினர். பல நீதிபதிகள் மலைப் பகுதிகளுக்கு சென்று ஓய்வெடுத்தனர். ஆங்கிலேயர்களால்தான் இங் குள்ள கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லை. அதனால் நீதிமன் றங்களுக்கு அப்போது விடுமுறை விட்டனர். தற்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் இந்தியர்களாகவே உள்ள நிலை யில் கோடை விடுமுறை அவசியம் தானா என்பது கோடை விடு முறையை எதிர்ப்போரின் வாதமாக உள்ளது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது:
வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி:
வழக்கறிஞர்கள் விடுமுறையில் வெளியூருக்கு போகிறார்களோ இல்லையோ, அவர்கள் தங்களது குடும்பத்தினரோடு இருக்கவும், வெயிலில் இருந்து தப்பிக்கவும் நியாயமான காரணம்தான் இந்த விடுமுறை. வழக்கறிஞர் தொழில் என்பது உடல் உழைப்பல்ல. மூளை உழைப்பு. அதுவும் இந்த கோடை காலத்தில், குளிரூட்டப்பட்டுள்ள காரணத்தால் உயர் நீதிமன்றம் பரவா யில்லை. கீழமை நீதிமன்றங்களில் ஓடாத மின்விசிறிகள், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வழக்கறிஞர்கள் அனுபவிக்கும் கொடுமையை சொல்லி மாளாது.
வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்:
தினமும் நீண்டநேரம் பணி செய்வதால், குடும்பத்தோடு நேரம் செலவிட முடிவதில்லை. கோடை காலத்தில் பணி செய்வதும் சிரமம். ஆகவே, வழக்கறிஞர்களுக்கு கோடை விடுமுறை அவசியம்.
வழக்கறிஞர் அஜிதா:
மருத்துவர்கள் உட்பட அரசுத் துறை எதுவாக இருந்தாலும் அங் கெல்லாம் உயர் நீதிமன்றத்தைப் போல நீண்ட விடுமுறை கிடை யாது. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருந்ததால், அவர் கள் சொந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், கோடை வாசஸ்தலங்களுக்கு செல் வதற்காகவும் உயர் நீதிமன்றத்துக்கு நீண்டநாள் விடுமுறை விடப்பட்டது.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றோர் கடுமையான வேலை செய்கின்றனர். அவர்களில் தேவைப்படுவோர் தேவைப்படும் போது மட்டும்தான் விடுமுறை எடுக்கின்றனர். அவர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை கிடையாது. அது போலத்தான் இருக்க வேண்டுமே தவிர, ஒரு துறைக்கே நீண்டநாள் விடுமுறை விடுவது ஏற்புடைய தல்ல. ஓய்வுக்கும், விளையாட் டுக்கும், வளர்ச்சிக்குமான உரிமை உடையவர்கள் குழந்தைகள். அத னால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதை, நீதிமன்ற விடுமுறை யோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கோடை விடுமுறையை பொது வாக வழக்கறிஞர்கள் எப்படி கழிக் கிறார்கள் என்பது பற்றி வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் கூறியதாவது:
மே முதல் வாரத்தில் நிறைய விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும். இளம் வழக்கறிஞர்களை கவுரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் விருந்து கொடுத்து, பரிசுப் பொருட்களையும் அளிப்பார்கள். விடுமுறை காலத் தில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர் களுக்கு செல்கின்றனர்.
இவை தவிர இப்போது கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று வரும் வழக்கறிஞர்கள் மிக அதிகமாக உள்ளனர் என்றார்.
நீதிமன்ற விடுமுறை காலங்கள்
உச்ச நீதிமன்றத்துக்கு வரும் மே 16 முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஒன்றரை மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையில் உச்ச நீதிமன்ற பதிவுத்துறை சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாட்களில் செயல்படும். ஜூன் 29 முதல் உச்ச நீதிமன்றம் வழக்கம்போல செயல்படும் என உச்ச நீதிமன்ற தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதேப்போல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கு மட்டும் மே 1 முதல் மே 31 வரை கோடை விடுமுறை அளித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
ஆனால், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், கலவர தடுப்பு நீதிமன்றங்கள், போதை பொருள் தடுப்பு நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள் வழக்கம்போல் இயங்கும். குடும்ப நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் மே 15 வரை கோடை விடுமுறை விடப்பட்டள்ளது.