

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
தமிழக அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தின் கூட்டரங்கில் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான பொன்முடி முன்னிலை வகிக்கிறார். சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.
பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு படிப்புகளில் முதலிடம் பிடித்த 359 பேருக்கு தங்கப் பதக்கமும் பிசிஏ படிப்பில் முதலிடம் பெற்றுள்ள கோவை மாணவி எம்.நிவேதாவுக்கு ஆசியாவுக்கான காமன்வெல்த் ஊடக மைய விருதும் வழங்கப்படுகின்றன. இந்த பட்டமளிப்பு விழா மூலம் 19,363 பேர் பட்டம் பெறுகிறார்கள். உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன், துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி, பதிவாளர் கு.ரத்தினகுமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.