Published : 30 May 2022 07:10 AM
Last Updated : 30 May 2022 07:10 AM

4-ம் நாள் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஒன்பது தலை கொண்ட நாக வாகனத்தில் வீதியுலா வந்த காஞ்சி வைகுந்த பெருமாள்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாக வாகனத்தில் தேவி, பூதேவியுடன் வலம் வந்த காஞ்சி வைகுந்தப் பெருமாள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் கோயில் 4-ம் நாள் பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ‘பரமேஸ்வர விண்ணகரம்’ எனும் பெயர் பெற்றதுமான  வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான நேற்று முன்தினம் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4-வது நாளான நேற்று நாக வாகனத்தில் ராமர் நிற மற்றும் வெளிர் பச்சை வண்ணப் பட்டாடை உடுத்தி நாக வாகனத்தில், பெருமாள் இடது காலை மடக்கி தனது இடது கையை கால் முட்டியின் மீது வைத்து ராஜ கோலத்தில் எழுந்தருளினார். தேவி, பூதேவி ஆரஞ்சு மற்றும் அடர்த்தியான நீல வண்ணத்தில் பட்டாடை உடுத்தி, தங்க, வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டு பெருமாளுடன் எழுந்தருளினர்.

வைகுண்ட பெருமாள், கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தார். வழியெங்கும் திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். இன்று பெருமாள், மோகினி அவதாரத்திலும், யாளி வாகனத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x