

குன்றத்தூர்: தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் அவருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் குன்றத்தூரில் தெய்வ சேக்கிழார் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மூன்று நாள் விழாவாக நடைபெற்று நிறைவுபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினர்.
முன்னதாக இவ்விழாவில் ‘பெரிய புராணம் போற்றும் பெண் நாயன்மார்கள்’ என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
முதல்வரைப் பொருத்தவரை இறை நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவரும் சமம். மக்கள் அனைவரும் ஒரு சேர உருவாக்கியதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. ஆண்டுதோறும் சேக்கிழாருக்கு ஒருநாள் மட்டுமே அரசு விழா நடைபெறும்.
இந்த ஆண்டு முதல் மூன்று நாட்கள் நடைபெற வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியதன்பேரில் மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் பெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் பேரவை காங்கிரஸ் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் வான்மதி, இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன், உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு, செங்கல்பட்டு உதவி ஆணையர் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.