Published : 30 May 2022 06:15 AM
Last Updated : 30 May 2022 06:15 AM
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை விரைந்து தொடங்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கட்டப்படும் கட்டிடங்கள், மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், நூலகம் ஆகியவற்றை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவ மனையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் ரூ.130 கோடியில் கூடுதல் வசதிக்கான பணிகள் நடைபெறுகின்றன. இதை பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி யில் தற்போது 250 மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. முது நிலை வகுப்புகளிலும் மாணவர் கள் அதிகரித்துள்ளதால் கூடு தல் மாணவர்கள் விடுதி, புதிய நூலகக் கட்டிடம், நெஞ்சக, நுரையீரல் சிகிச்சை கட்டிடம் என ரூ.62 கோடிக்கு மேல் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. அப் பணிகளைப் பார்வையிட்டேன்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் சுகாதாரப் பணி சிறப்பாக உள்ளது.
பிற மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத் தில் கரோனா கட்டுக்குள் உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். ஒரு சில மாவட்டத்தில் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு உள்ளது. மீண்டும் கரோனா பரவாமல் இருக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் தாமாக முன்வந்து பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டு 9 மாதம் கடந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை வந்துள்ளது. இந்நோய் இந்தியாவில் இதுவரை யாருக்கும் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை விரைந்து தொடங்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம்.
அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துகளைத் தடுக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. தீத்தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மருத்துவமனை டீன் ரெத்தினவேலு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT