

தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 வாக்காளர்களே உள்ள ஒரு வாக்கு சாவடிக்காக அதிகாரிகள் சற்றேறக்குறைய 300 கிலோ மீட்டர் தூரம் (போக, வர) பயணித்து காத்திருக்க, அதில் ஒருவர் கூட வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 1 மேல் கோதையாறு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மின்நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 9 வாக்காளர்கள் மொத்தத்தில் உள்ளனர்.
தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தல் தொடர்பான ஆவணங்களுடன், மண்டல தேர்தல் அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர், போலீஸார் என மொத்தம் 12 அலுவலர்கள் 2 வானங்களில் மேல் கோதையாறு புறப்பட்டுச் சென்றனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த பகுதி என்றாலும், இங்கு செல்வது தலையை சுற்றி மூக்கை தொடும் கதை தான். அதிகாரிகள் தக்கலையில் இருந்து நாகர்கோவில், பணகுடி, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை வழியாக 153 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மேல் கோதையாறு பகுதிக்கு நேற்று முன் தினம் அடைந்தனர். நேற்று வாக்குச்சாவடி மையத்தில் 9 வாக்காளர்களுக்காக தவமாய், தவமிருந்தனர் இந்த அதிகாரிகள்.
ஆபத்தான பாதை
ஆனால் இம்மக்கள் தங்களுக்கு நெல்லையில் இருந்து மாஞ்சோலையை அடுத்த நாலுமுக்கு வரையில் தான் பேருந்து வசதி இருப்பதாகவும், அதன் பின்பு சற்றேறக்குறைய நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு கரடு முரடான பாதையில் பயணித்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதும், பணிக்கு செல்வதும் சிரமமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு மட்ட த்தில் உரிய நடவடிக்கை இல்லாததால் இத்தேர்தலை புறக்கணித்தனர். 9 பேருக்காக காத்திருந்த, 12 பேரும் காலிப் பெட்டியுடன் ஊர் திரும்பியுள்ளனர்.தேர்தல் அதிகாரிகள் ஊர் திரும்பிய நொடிப் பொழுதில், இப்பகுதிக்கு செல்வதன் சிரமமும் புரிந்திருக்கும் என்பதே அந்த வாக்காளர்களின் மனநிலை.