Published : 30 May 2022 06:53 AM
Last Updated : 30 May 2022 06:53 AM
தஞ்சாவூர்: மெழுகை கொண்டு மேளம் அமைக்காமல் முதன்முறையாக முழுவதும் மரத்தால் தஞ்சாவூர் வீணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இசைக் கருவிகளுள் முதன்மை பெற்று விளங்கும் வீணை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள பலாமரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ளஇசைக் கலைஞர்களால் இசைக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியம், நேர்த்தியான வடிவமைப்பும் கொண்டதஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீணையை பலா மரத்தில் செய்தாலும், அதன் மேல் பகுதியில் மெல்லிய கம்பிகளை பொருத்தும் பகுதி பைபர் மற்றும் மெழுகால் செய்யப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், தற்போது பைபர் மற்றும் மெழுகை பயன்படுத்தாமல் அதற்கு பதில், வேங்கை மரத்தின் சட்டத்தைப் பயன்படுத்தி வீணை வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த வீணை முழுவதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வீணைகோவையில் இசைப் பயிற்சி ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பப்பட உள்ளது.
இதுகுறித்து வீணையை தயாரித்த தஞ்சாவூர் அப்துல்வஹாப் நகரைச் சேர்ந்த சு.கோவிந்தராஜ்(70) கூறியது: நான் 55 ஆண்டுகளாக வீணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் பரம்பரையாக வீணை தயாரித்து வந்துள்ளனர்.
பலா மரங்களைக் கொண்டு வீணையை தயாரித்தாலும், அதில் மேளம் உள்ள பகுதி மெழுகு மற்றும்பைபரால் இணைக்கப்பட்டிருக்கும்.
இதுபோன்ற வீணையை செய்ய 20 நாட்கள் ஆகும். ஆனால், நான் மெழுகு மற்றும் பைபர்பயன்படுத்தாமல், வேங்கை மரத்தின் சட்டங்களை பயன்படுத்தி முழுவதும் மரத்தால் ஆன வீணையை வடிவமைத்துள்ளேன். இந்த வீணையை வடிவமைக்க ஒரு மாதத்துக்கு மேலாகியது.
முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட இந்த வீணையில் ஒலியும், அதிர்வுகளும் அதிகமாக வெளிப்படுகின்றன. தற்போதுதான் முதன்முதலாக முழுவதும் மரங்களை பயன்படுத்தி வீணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT