

அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் லோக் அயுக்தா அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணபலத்தின் உதவியுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி எப்படி மாறவில்லையோ, அதேபோல் காட்சியும் மாறவில்லை.
கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் தான் இந்த ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துகின்றனர். இவர்களால் தமிழகத்தை சீரழிக்க முடியுமே தவிர முன்னேற்ற முடியாது. இந்த அமைச்சர்களை வைத்துக் கொண்டு தான் ஊழலற்ற ஆட்சியைத் தரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார்.
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும், பொது சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதும் தவிர்க்க முடியாதவை ஆகும்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே இவற்றுக்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.