Published : 19 May 2016 06:24 PM
Last Updated : 19 May 2016 06:24 PM

மாற்று அரசியலை வளர்க்க வழியே இல்லை: தமிழருவி மணியன் விரக்தி

அதிமுகவே மீண்டும் ஆட்சியில் தொடரும் நிலை வாய்த்திருப்பது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 1984 முதல் அதிமுகவும் திமுகவும் தமிழகத்து ஆட்சி நாற்காலியில் மாறி மாறி அமரும் சூழல் இன்று முறியடிக்கப்பட்டு அதிமுகவே மீண்டும் ஆட்சியில் தொடரும் நிலை வாய்த்திருக்கிறது. இது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றாலும் இந்த முடிவு ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளையும், ஊழலற்ற ஆட்சிமுறையையும், நேர்த்தியான நிர்வாகத்திறனையும் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க சிறுபான்மை வாக்காளர்களுக்கு வாய்த்திருக்கும் மிகப் பெரிய தோல்வி என்பதே வருந்தத்தக்க உண்மையாகும்.

கள நிலவரத்தைக் கணக்கில் கொண்டு அதிமுக 130 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றியைப் பெறும் என்றும் எதிர்க்கட்சிகளே இடம்பெறாத சட்டமன்றத்தை சந்திக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்க்கப்பட்டு எண்ணிக்கை வலிமையுடன் எதிர்க்கட்சி வரிசையில் திமுக உறுப்பினர்கள் இடம் பெறுவதற்கு வாக்காளர்கள் வழிவகுப்பார்கள் என்றும் காந்திய மக்கள் இயக்கம் முன்வைத்த கருத்தின் படியே தேர்தல் முடிவுகள் மாறாமல் அமைந்துள்ளன.

ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளின் பக்கம் பார்வையைத் திருப்பவோ, நேர்மை- நல்லொழுக்கம்- சேவா உணர்ச்சி போன்ற தனிமனிதப் பண்புகளை அடிப்படைத் தகுதிகளைக் கொண்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவோ தமிழகத்து வாக்காளர்கள் இன்றளவும் தயாராக இல்லை என்ற உண்மையை உணரும் போது, மாற்று அரசியலை இந்த மண்ணில் வளர்த்தெடுப்பதற்கு வழியே இல்லை என்ற வேதனையும் விரக்தியும் மட்டுமே மேலெழுந்து நிற்கின்றன'' என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x