Published : 29 May 2022 04:00 AM
Last Updated : 29 May 2022 04:00 AM

ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் வரத்து

கூடங்குளம் அணு மின் நிலையம்.(கோப்புப் படம்)

திருநெல்வேலி

ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் நேற்று வந்து சேர்ந்தன.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 3, 4, 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அணு உலைகளில் மின்உற்பத்தி செய்வதற்காக, செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரிகோல்கள் ரஷ்யாவின் அரசுத்துறை நிறுவனமான ரோஸாட்டம் நிறுவனத்திலிருந்து பெறப்படுகின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்களை 60 ஆண்டுகளுக்கு வழங்குவதாக, இந்தியஅணுமின் கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ரோஸாட்டம் நிறுவனம் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 29-ம்தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் கூடங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டன.

தற்போது, 4 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் யுரேனியம் எரிகோல்கள் கூடங்குளத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டன. மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக யுரேனியம் எரிகோல்கள் கொண்டு வரப்பட்டன. மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புடன், நேற்று காலையில் கூடங்குளத்துக்கு அவை வந்து சேர்ந்ததாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளத்தில் செயல்பாட்டிலுள்ள முதல் 2 அணு உலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கிறது. இந்நிலையில், 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணிக்காகவும், ஏற்கெனவே பயன்படுத்திய யுரேனியம் எரிகோல்களை மாற்றி புதிய எரிகோல்களை பொருத்தும் பணிக்காகவும் கடந்த மார்ச் 25-ம் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைந்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் 55 நாட்கள் நடைபெறும் என்றும், அதன்பின் மின்உற்பத்தி வழக்கம்போல் தொடங்கும் என்றும், அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. தற்போது, இங்கு கொண்டுவரப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட எரிகோல்களை 2-வது அணுஉலையில் எரிபொருளாக நிரப்பும் பணிகள் அடுத்துவரும் நாட்களில் நடைபெறவுள்ளது.

3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் ரூ.39,747 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. 3-வது அணு உலையில் 2023-ம் ஆண்டு மார்ச்மாதத்திலும், 4-வது அணு உலையில் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திலும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல், 5 மற்றும் 6-வது அணுஉலைகளை ரூ.50 ஆயிரம் கோடியில் அமைக்க இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. கரோனா பாதிப்புக்குப்பின் இந்த பணிகளும் வேகமெடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x