Published : 28 May 2016 10:05 AM
Last Updated : 28 May 2016 10:05 AM

அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: உங்கள் குரல் சேவையில் வாசகர்கள் யோசனை

அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் வாசகர்கள் யோசனை தெரிவித்தனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆகும் மின்கட்டணச் செலவை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களே முன்பு செலுத்திவந்தன. அரசு பள்ளிகள் சொந்த கட்டிடங்களில் இயங்கினால் பள்ளிக்கு ஒதுக்கப்படும் சில்லறை செலவினத் தொகையில் இருந்து பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மின்கட்டணத்தை செலுத்துவார்கள். மின்கட்டணம் அதிகமாக வந்தால் அதை ஈடுகட்ட பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து பணம் செலுத்தப்படும்.

சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகம், மின் மோட்டார் போன்றவை காரணமாக மின்கட்டணம் அதிகளவில் வரும். பள்ளிக்கு ஒதுக்கப்படும் சில்லறை செலவினம், பெற்றோர் ஆசிரியர் கழக நிதி என பல்வேறு வழிகளில் பணத்தை புரட்டியே தலைமை ஆசிரியர்கள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் இயங்கி வரும் அரசு பள்ளிக ளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் தான் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு உள்ளாட்சித்துறை ஓர் உத்தரவை பிறப்பித்தது. ஆனால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக அதிகாரிகள் சரிவர மின்கட்டணத்தை செலுத்தாததால் பல பள்ளி களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மின்வாரியத்தைப் பொருத்தவரையில் தொடர்ந்து 6 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை எனில் அந்த மின் இணைப்பை துண்டித்துவிடும். மின்கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளில் கூட அதை சரிவர பார்த்து செலுத்தாததால் மின்கட்டணம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்திலிருந்து மின்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.

இந்த நிலையில், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் மின்சாரத்தை இலவசமாக வழங்கிவிடலாம் என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் வாசகர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:

பொதுவாக அரசுப் பள்ளிகளில் மின் கட்டணம் குறைவாகத்தான் வருகிறது. வீடுக ளுக்கு 100 யூனிட்களுக்கு மின்கட்டணம் இலவ சம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு மின் கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், டிவி என பல்வேறு மின்சாதனங்களை அரசு வழங்கு கிறது. இவற்றோடு சேர்த்து மின்சாரத்தையும் இலவசமாக வழங்கிவிடலாம். இதன்மூலம், கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக மின்கட்டணம் செலுத்தப்படாமல் மின் இணைப்பு துண்டிப்பு சம்பவங்களை தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x