

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யார் தவறு செய்தாலும் பொதுமக்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கேள்வி கேட்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் செய்யதுகாஜாசெரீப், திருச்சுழி தொகுதி வேட்பாளர் ராஜ், சிவகாசி தொகுதி வேட்பாளர் சுதாகரன், ராஜபாளையம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குருசாமி, சாத்தூர் தொகுதி மதிமுக வேட்பாளர் ரகுராமன், திருவில்லிபுத்தூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லிங்கம், அருப்புக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வக்குமார் ஆகியோரை ஆதரித்து விருதுநகரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று பேசியதாவது:
திமுக, அதிமுக இரண்டும் விஷச் செடிகள். சான்றிதழ் வாங்கும்போது அரசு அதிகாரிகள் கடமையைச் செய்ய பணம் கொடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யார் தவறு செய்தாலும் கேள்வி கேட்கலாம். ஏனெனில் இது கூட்டணி ஆட்சி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த மண்ணில் பிறந்த காமராஜர் படி, படி என்றார். திராவிட கட்சிகள் 50 ஆண்டுகள் ஆண்டது போதும் என்றார்.
பிரேமலதா
நத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து நத்தத்தில் பிரேமலதா பேசியதாவது:
திமுக, அதிமுக கட்சிகளின் ஊழலால் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்துக்கு சென்றுவிட்டது. மின்வெட்டு குறித்து நத்தம் விஸ்வநாதன் தரும் தகவல்கள் பொய்யானவை. நத்தத்தில் மின் தட்டுப்பாட்டால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழக மக்களை திமுக, அதிமுக கட்சிகள் அடிமையாக்கி வைத்துவிட்டன. தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக இரு கட்சியினரும் 100 ஆண்டுகள் ஆனாலும் மதுக்கடைகளை மூடமாட்டார்கள். நத்தத்தில் மாம்பழச்சாறு தொழிற்சாலை கொண்டு வரப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றார்.