Published : 13 May 2016 01:56 PM
Last Updated : 13 May 2016 01:56 PM

தேர்தல் முடிந்ததும் விஜயகாந்த் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிடுவார்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும் விஜயகாந்த் குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்றுவிடுவார் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

அதிமுக மாவட்டச் செயலரும் அமைச்சரும் சிவகாசி தொகுதி வேட்பாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் கூறியது: அருப்புக்கோட்டைக்கு முதல்வர் வந்து சென்றபின் நிலையே மாறிவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

அதிமுக என்பது கடல். கடலில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். தேர்தலில் இது அனைத்தும் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்போல் பிரச்சினைகள் அனைத்தும் ஓடிவிடும்.

இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த பணம் ஒதுக்கீடு செய்துள்ளது? வெள்ளம் வந்தபோதுகூட தமிழக அரசு பணத்தைத்தான் முதல்வர் கொடுத்தார். மத்திய அரசு கொடுத்த தொகை யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றுதான் இருந்தது. அமைச்சர்கள் நாங்கள்தான் தண்ணீரில் சென்று மக்களுக்கு தேவையானதை வழங்கினோம்.

வெள்ளம் வந்தபோதும் யாருக்காவது தொற்று வியாதி வந்ததா? குஜராத்தில் வெள்ளம் வந்தபோது வெள்ளத்தில் இறந்தது 200 பேர்.

ஆனால் தொற்று வியாதியால் இறந்தது 2 ஆயிரம் பேர்.

சென்னையில் தொற்று வியாதி வராமல் தடுக்க அத்தனை மருத்துவ முகாம்களை அமைத்தார் முதல்வர். பணப்பட்டுவாடா செய்வார்கள் என்பது தோல்வி பயத்தால் மற்ற கட்சிகள் கூறுவது. இந்த தேர்தல் முடிந்ததும் அதிமுக மட்டும்தான் இருக்கும். திமுக சுத்தமாகப் போய்விடும்.

விஜயகாந்த கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். விஜயகாந்த் சிங்கப்பூருக்கு விசா வாங்கி வைத்துள்ளார். தேர்தல் முடிந்ததும் குடும்பத்தோடு அவர் சிங்கப்பூர் சென்றுவிடுவார்.

வரும் 16-ம் தேதி 6 மணிக்கு அவர் விமானத்தில் ஏறிவிடுவார். 19-ம் தேதி இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x