Published : 29 May 2022 05:00 PM
Last Updated : 29 May 2022 05:00 PM

‘‘பாமக 2.0... ‘முதல் கையெழுத்து’ பூரண மதுவிலக்கு’’ - தலைவரான பின் அன்புமணியின் முதல் பேச்சு

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணிக்கு வெள்ளிச் செங்கோல் வழங்கினார் ஜி.கே.மணி. உடன், நிறுவனர் ராமதாஸ், பொதுச் செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் நிர்வாகிகள். படம்: ம.பிரபு

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி நேற்று தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே தலைவராக இருந்த ஜி.கே.மணி கட்சியின் கவுரவத் தலைவரானார்.

பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடைபெற்றது. கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதில், அன்புமணியை கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யும் தீர்மானத்தை, ஜி.கே.மணி முன்மொழிய, பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இதையடுத்து, பாமக தலைவராக அன்புமணி அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, தந்தை ராமதாஸிடம் வாழ்த்துப் பெற்ற அன்புமணியை கட்டியணைத்து, முத்தமிட்டு வாழ்த்தினார்.

அன்புமணிக்கு வெள்ளிச் செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஜி.கே.மணி. அதேபோல, கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், வெள்ளி வாள் வழங்கியும் வாழ்த்தினர். தீரன், ஜி.கே.மணிக்கு அடுத்து பாமகவின் மூன்றாவது தலைவராக அன்புமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், கட்சியின் கவுரவத் தலைவராக ஜி.கே.மணியை அறிவித்து, ராமதாஸ் பேசியதாவது: பாமகவினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களும் அன்புமணியை வாழ்த்த வேண்டும். தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுக்கவே, அன்புமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2016-ல் மாற்றத்தை முன்வைத்த போது, மக்களிடம் பாமகவுக்கு ஆதரவு இல்லை. ஆனால், அன்புமணி தலைவரான பின்னர், மக்களிடம் கண்டிப்பாக மாற்றம் உருவாகும். 2026-ல் மக்கள் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவார்கள். ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய ஓராண்டில், டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது. இப்போது பஞ்சாப்பையும் பிடித்துவிட்டனர். ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் பாமகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. கட்சியினர் ஒழுங்காக வேலை செய்வதில்லை. ஆனாலும், கோஷ்டிகளுக்கு மட்டும் குறைவில்லை. எனவே, காக்கைகளை உடன் வைத்துக்கொள்ளாமல், உழைப்பவர்களை அன்புமணி உடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

1996-ல் தனியாகப் போட்டியிட்டு 4 எம்எல்ஏ-க்களைப் பெற்றோம். 25 ஆண்டுகளுக்குப் பின் 2021-ல் கூட்டணிவைத்து 5 இடங்களைப் பெற்றிருக்கிறோம். அந்த நான்கு ஏன் நாற்பதாக மாறவில்லை? கட்சியினரைக் கண்காணிக்க நான் உளவுத்துறையை வைத்திருக்கிறேன். ஒவ்வொருவரும் குறைந்தது 100 வாக்குகளை வாங்கித் தந்து, அன்புமணியை முதல்வராக்குவேன் என சபதம் ஏற்று உழைக்க வேண்டும். இவ்வாறு செய்பவரே உண்மையான பாமக தொண்டர்.

வரும் வழியில் திமுக சுவர் விளம்பரத்தைப் பார்த்தேன். அதில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எழுதியுள்ளனர். திமுக கட்டுக்கோப்பான கட்சி. 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலும், 2026-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் வர உள்ளன. எனவே, கூட்டம் முடிந்து சென்றதும், உங்கள் மனசாட்சியுடன் பேசுங்கள். அன்புமணியை முதல்வர் நாற்காலியில் அமர்த்த உழையுங்கள். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

2026-ல் பாமக ஆட்சி

இக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: பாமக 2.0-வைச் செயல்படுத்துவோம். பாமக மற்ற கட்சிகளைப்போல இல்லை. வித்தியாசமான கட்சி. யாராவது தவறாக நடந்துகொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். 100 சதவீதம் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் இருக்கக் கூடாது. நான் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் ஓயாமல் உழைப்பேன். 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் பாமக ஆட்சி அமைக்கும். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், ஜல்லிக்கட்டு காளையைப்போல ஓடிவருவேன்.

‘முதல் கையெழுத்து’ பூரண மதுவிலக்கு

தமிழகத்தை ஆள்வதற்குத் திறமையும், தகுதியும் உள்ள ஒரே கட்சி பாமகதான். எனவே, நிச்சயம் மக்கள் வாய்ப்புத் தருவார்கள். பாமக ஆட்சிக்கு வந்தவுடன் போடக்கூடிய முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காகத்தான். அனைத்து சமுதாயத்தினரும் பாமகவில் உள்ளனர். சமூக நீதியே நமது கொள்கை. உன்னதத் தலைவரான அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கான தலைவராக மாற்றியுள்ளனர். சென்னையில் இன்னும் ஒரு மாதத்தில் பாமக அலுவலகம் திறக்கப்படும். பொதுமக்கள் அங்கு என்னை சந்தித்து, குறைகளைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அன்புமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x