மொழியை திணிக்கவோ, எதிர்க்கவோ வேண்டாம் - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து
சென்னை: தாய்மொழியை வளர்க்க வேண்டும். அதேநேரம், எந்த மொழியையும் திணிக்கவும் வேண்டாம், எதிர்க்கவும் வேண்டாம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், அண்ணா சாலை அருகில் தமிழக அரசு சார்பில், 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரம் கொண்ட, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று மாலை திறந்து வைத்து, சிலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், திமுக பொதுச் செயலர் துரைமுருகன் வரவேற்றார். கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காணொலித் தொகுப்பு திரையிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: இந்தியாவின் ஆற்றல் மிகுந்த முதல்வர்களில் கருணாநிதியும் ஒருவர். சிறந்த நிர்வாகி என்பதுடன், அடித்தட்டு மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் உழைத்தவர். அனைவருக்கும் சமூகநீதியை வழங்கியவர். நான் கருணாநிதியை எனது மாணவப் பருவத்தில் இருந்தே பார்த்துள்ளேன். ஏழை மக்களைப் பற்றிய அவரது தெளிவான பார்வை, எண்ணங்கள், செயல்பாடுகள் உள்ளிட்டவை என்னைக் கவர்ந்தன. அவர் நாட்டின் சக்தி வாய்ந்த முதல்வராக இருந்தார்.
ஜனநாயகத்தில் ஏற்பதும், மறுப்பதும் அவசியம். பொதுவாழ்வில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும். பல்வேறு கட்சிகள், சிந்தனைகள், வெவ்வேறு வழிகளில் செயல்பட்டாலும், அனைவரும் பணியாற்றுவது மக்களுக்காகத்தான் என்பதை உணர வேண்டும். நாம் எதிரிகள் அல்ல; அரசியல் மாற்றுக் கருத்து உடையவர்கள்தான். நவீன அரசியல்வாதிகளுக்கு இதை அறிவுரையாகக் கூறுகிறேன்.
கருணாநிதி, முரசொலிமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டபோது, அப்போதைய காவல் துறையினரால் சரியாக நடத்தப்படவில்லை. இதைக் கூறுவதில் நான் தயங்கவில்லை. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டும். கருணாநிதி அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டவர் என்பதுடன், 50 ஆண்டுகள் கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி. சிறந்த பேச்சாளரான அவர், நகைச்சுவையாகவும், அதேநேரத்தில் கருத்துடனும் பேசுபவர்.
பன்முகத்தன்மை கொண்ட அவரது திரைக்கதையும், வசனங்களும் தமிழ் சினிமாவில் புதிய வடிவத்தை உருவாக்கின. சிறந்த விமர்சகரும், அரசியல் அறிஞருமான அவர், முரசொலியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். சிறந்த நிர்வாகி, சமூகப் போராளி, அரசியல் சீர்திருத்தவாதி, வசனகர்த்தா, கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பல்வேறு திறன்களை ஒருங்கே கொண்டிருந்தார். வளர்ந்த இந்தியாவை வடிவமைக்க, மக்களை மையமாகக் கொண்டு செயல்பட்ட சிறந்த தலைவர்கள் பட்டியலில் கருணாநிதிக்கும் இடம் உண்டு.
நமது சிந்தனைகள், எழுத்து, செயல்பாடுகள் மக்களை மையப்படுத்தியே இருக்க வேண்டும். தற்போது இந்தியா அதை நோக்கிச் செல்கிறது என்பதில் ஐயமில்லை. பலம் வாய்ந்த நாடாக, நிலைத்த அரசு மற்றும் சிறந்த தலைமையின் கீழ் தேசம் உள்ளது. பல்வேறு கட்சிகள் மாநிலங்களை ஆட்சி செய்தாலும், அனைவரும் இணைந்து மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும். மாநிலங்கள் வளராமல் நாடு வளராது. எனவே, மாநில நிர்வாகமும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
எல்லா இந்திய மொழிகளும் வளம் கொண்டவை. அதே நேரம், தாய்மொழி, தாய் நாடு முக்கியம். தாய்மொழி என்பது நமது கண்களைப் போன்றது. இதர மொழிகள் கண் கண்ணாடியைப் போன்றவை. இதை மனதில் கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டில் தாய்மொழியில் பேசுங்கள். தாய்மொழியை வளர்க்க வேண்டும். அதேநேரம், இதர மொழிகளைக் கற்பதில் தவறில்லை. கருணாநிதி தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம், தமிழ் இலக்கியத்தை வளர்த்தார். நம் மொழிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதேநேரம், எந்த மொழியையும் திணிக்கவும் வேண்டாம்; எதிர்க்கவும் வேண்டாம்.
கருணாநிதியின் உழவர் சந்தை, ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்கள், அவரது தொலைநோக்கு அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றன. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்ற, உண்மையான பன்முக ஆளுமைக் கொண்டவர் கருணாநிதி. அனைத்து நிலைகளிலும் தமிழகம் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்யும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி.ராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈவிகேஎஸ்.இளங்கோவன், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர், தொண்டர்கள் கலந்துகொண்டனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு நன்றி கூறினார்.
