Last Updated : 15 May, 2016 02:26 PM

 

Published : 15 May 2016 02:26 PM
Last Updated : 15 May 2016 02:26 PM

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்: திண்டிவனம் வாக்காளர்கள் கோரிக்கை

கரைபடியாத கரத்திற்கு சொந்தகாரர்... தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருகிறது.

சென்னையைச் சுற்றிலும் தமிழகத்தின் அரசியல் புயல் மையம் கொண்ட காலங்களில் பாமகவால் திண்டிவனத்திற்கு பக்கத்தில் இருந்து ஒரு அரசியல் மையம் உருவானது. இக்கட்சியின் தலைமையகம் பக்கத்தில் உள்ள வானூர் தொகுதிக்குட்பட்ட தைலாபுரத்தில் இயங்கினாலும், திண்டிவனம் தொகுதி இக்கட்சியின் தவிர்க்க முடியாத பிம்பமாகி விட்டது.

சென்னை - தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரங்களில் திண்டிவனமும் ஒன்றே. விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவு தனியார் பள்ளிகளும் இங்கு இயங்கி வருகின்றன.

தொகுதி அறிமுகம்

1951ம் ஆண்டு திண்டிவனம் தொகுதி உருவானது. திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள், ஓலக்கூர் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், மயிலம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு இத்தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

தொகுதியின் அரசியல் நிலவரம்

1951ம் முதல் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் வரை இத்தொகுதியில் முறையே 4 முறை திமுகவும், அதிமுகவும், காங்கிரஸும், 2 முறை சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளது. பொதுத் தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 2011 ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக மாற்றம் பெற்றிருக்கிறது.

வாக்காளர்கள் விவரம்

இத்தொகுதியில் 1 லட்சத்து 09 ஆயிரத்து 231 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 275 பெண் வாக்காளர்களும் 4 திருநங்கைகளும் என 2 லட்சத்து 20 ஆயிரத்து 510 வாக்காளர்கள் உள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவரம்

1951 ஜெகநாதன் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

1957 பி. வீரப்ப கவுண்டர் சுயேச்சை

1962 எ. தங்கவேலு திமுக

1967 கே. இராமமூர்த்தி காங்கிரசு

1971 ஜி. இராசாராம் திமுக

1977 டி. ஆர். இராசாராம ரெட்டி காங்கிரசு

1980 தங்கமணி கவுண்டர் காங்கிரசு

1984 டி. கே. தங்கமணி காங்கிரசு

1989 ஆர். மாசிலாமணி திமுக

1991 எசு. பன்னீ்செல்வம் காங்கிரசு

1996 ஆர். சேதுநாதன் திமுக

2001 சி. வி. சண்முகம் அதிமுக

2006 சி. வி. சண்முகம் அதிமுக

2011 த. அரிதாஸ் அதிமுக

தொகுதியின் முக்கிய பிரச்சினைகள்

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையத்தை உடனே அமைத்து தரவேண்டும். மரக்காணத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கான கிடங்கு, மீனவர்களின் தூண்டில் வலை, சாரம் நூற்பாலையை திறக்க வேண்டும்.

வெண்மணியாத்தூரில் சிப்காட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெற்றி பெரும் வேட்பாளர் செயல்படுத்தி இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும். மீனவர்களுக்கு தூண்டில் வலை, மீன் பதப்படுத்தும் கிடங்கு, உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து வைக்க கிடங்கு அமைக்க வேண்டும். திண்டிவனம் பஸ் ஸ்டாண்டை உடனே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

வேலை கிடைக்காததால் சென்னை, திருப்பூர், பெங்களூர் என வெளியூரில் சென்று இத்தொகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். வேலை வாய்ப்பை உருவாக்க சென்னைக்கு அடுத்தபடியாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இதுவெல்லாம் இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்.

குறிப்பாக எந்த வேலைவாய்ப்பும் தொகுதிக்குள் இல்லாததால் இப்பகுதி இளைஞர்கள் கடுமையான வருத்தத்தில் இருப்பதை அவர்களின் பேச்சில் உணர முடிகிறது. இப்படி பலஎதிர்பார்ப்புகளோடும் ஏக்கங்களோடும் இருக்கின்றனர் இத்தொகுதி மக்கள்.

களத்தில் இருப்பவர்கள்

இத்தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.பி ராஜேந்திரன், திமுக சார்பில் சீத்தாபதி சொக்கலிங்கம் போட்டியிடுகிறார்கள். இருவரும் ஒலக்கூர் ஒன்றிய குழுத்தலைவராக பதவி வகித்தவர்கள். பாமக சார்பில் காளிதாஸ், மக்கள் நல கூட்டணி சார்பில் தேமுதிகவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அனைவருமே முதன் முதலாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பவர்கள்.

கத்தரி வெயிலை பொருட்படுத்தாமல் அனல் பறக்க பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். நேற்று மாலை இறுதிகட்ட பிரச்சாரத்தில் இருந்தவர்களை தொடர்புகொண்டு வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள் பற்றி கேட்டபோது அவர்கள் கூறியது:

எஸ்.பி ராஜேந்திரன், அதிமுக

ராஜாங்குளத்தை சீரமைத்து நடைபயிற்சி செல்ல வசதி செய்து தரப்படும். கடலில் கலக்கும் நீரை சேமிக்க ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டப்படும். திண்டிவனம் பேருந்து நிலையம் உடனே திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மரக்காணத்தில் உற்பத்தியாகும் உப்பை சேமித்து வைக்க கிடங்கு அமைத்து தரப்படும்.

சீத்தாபதி சொக்கலிங்கம், திமுக

மரக்காணத்தில் மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை அமைத்து தரப்படும். கிராமப் புறங்களில் அடிப்படை வசதிகளாக சாலை, குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். மரக்காணம் அருகே உள்ள மூலிகைப்பண்ணை சீரமைக்கப்படும்.

காளிதாஸ், பாமக

திண்டிவனம் தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நவீனப்படுத்தப்பட்டு தடையில்லா மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். குப்பைகளும், கழிவுநீரும் அகற்றப்பட்டு எங்கும், எதிலும் தூய்மை என்ற நிலை உருவாக்கப்படும். கரணாவூர் இடுகாடு செல்ல பாலம் அமைத்து தரப்படும். மாதாமாதம் பொது மக்கள் குறைகள் கேட்கப்படும்.

உதயகுமார், தேமுதிக

அரசுப் பள்ளிகள் நெறிபடுத்தப்படும். ஒலக்கூரில் மூடப்பட்ட நூற்பாலை திறக்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு, நிலத்தடி நீர் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் பிடித்து வரப்படும் மீன்களை பாதுகாப்பாக வைக்க ஸ்டோரேஜ் அமைக்கப்படும். மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்று பெற்று தரப்படும்.

மக்கள் கருத்து

விஜி, திண்டிவனம்

சென்னை - தென் மாவட்டங்களை இணைக்கும் திண்டிவனத்தில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் விசாலமான புதிய பேருந்து நிலையம் கொண்டு வருவது உடனடித் தேவை.

சரத்குமார், திண்டிவனம்

சிப்காட் தொழிற்பேட்டை செயல்பட வேண்டும். அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டுவந்து இளைஞர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x