

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, பெருந்துறை, ஈரோடு உள்ளிட்ட இடக்களில் திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களை சந்திக்காத முதல்வராக ஜெயலலிதா இருந்து வருகிறார். மக்களைப் பற்றி கவலைப்படாத ஜெயலலிதாவுக்கு உங்களது எதிர்ப்பை தெரிவிக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம்; சொல்வதைத்தான் சொல்வோம். ஆனால், முதல்வர் ஜெயலலிதா சொன்னதை செய்தோம்; சொல்லாததையும் செய்தோம் என்று கூறுகிறார். வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்ததும், செம்பரம்பாக்கம் ஏரியையும் சொல் லாமல்தான் ஜெயலலிதா திறந்தார்.
தேர்தல் தோல்வி பயம் காரணமாக ஜெயலலிதா, இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் உள்ளார். திமுக தேர்தல் அறிக்கையை பார்த்தபின், தனது தேர்தல் அறிக்கையில் மாற்றங்களை அதிமுக செய்து வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவசமாக மின்சாரம், பைக், கார் போன்றவற்றை தருவதாக அறிவிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை தெரிந்து இது போன்ற பொய்யான அறிக்கையை அவர்கள் தர உள்ளனர்.
இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஈரோடு நெசவாளர்களுக்கு பணிகள் வழங்கப்படுவதில்லை. வெளிமாநிலங் களில் ஆர்டர் கொடுத்து இவை தயார் செய்யப்படுகின்றன. நெசவாளர் நலனில் அக்கறை காட்டியதால் கோ-ஆப்டெக்ஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை மாற்றிய அரசு இது. திமுக ஆட்சி அமைந்ததும், இலவச வேட்டி சேலை திட்ட ஊழல் குறித்து விசாரித்து தண்டனை வழங்கப்படும்.
கொங்கு மண்டலத்தில் உள்ள விளை நிலங்களின் வழியே கெயில் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்துக்கு திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொங்கு மண்டல விவசாயிகளுக்கு கெயில் திட்டத்தில் மிகப்பெரிய துரோகத்தை ஜெயலலிதா செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.