

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. எக்செல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.பிரேமசுதா எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர், தமிழில் 99, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் பாடங்களில் தலா 100 என, மொத்தம் 499 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், பங்காருபுரம் அருகே எர்ணம்பட்டி. இவரது தந்தை ஜி.ராஜேந்திரன் விவசாயம் செய்து வருகிறார். தாய் ரேணுகாதேவி, சகோதரி ரேவதி பிளஸ் 2 முடித்துள்ளார்.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயின்ற பிரேமசுதா, 9-ம் வகுப்பில் ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி. எக்செல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான பாடத் திட்டத்தில் படித்துள் ளார்.
மாநிலத்தில் முதலிடம் பிடித்தது குறித்து பிரேமசுதா திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் பள்ளியில் அனைத்து மாணவிகளும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள். எங்களுக்குள் இருந்த ஆரோக்கியமான போட்டியே என்னை அதிக மதிப்பெண் பெறச் செய்தது. 495 மதிப்பெண்ணுக்கு அதிமாக பெறுவேன் என, நம்பிக்கை இருந்தது. எனினும், மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. முதலிடம் பிடித்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தியது, விடாத முயற்சி என்னை சாதிக்க வைத்தது. எனது சித்தி சுஜாதா டாக்டராக உள்ளார். இதேபோல் நானும் டாக்டராக வேண்டும் என்பதே எனது ஆவலாக உள்ளது. பிளஸ் 2 தேர்விலும் மாநில அளவில் சாதிப்பதுதான் எனது அடுத்தகட்ட லட்சியமாக உள்ளது.
இவ்வாறு பிரேமசுதா கூறினார்.