Published : 28 May 2022 08:56 PM
Last Updated : 28 May 2022 08:56 PM

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: “பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு பாமகவின் தலைவராக உயர்ந்திருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு வாழ்த்து” என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உடலைப் பேணும் விருப்பில் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர், ஆரோக்கியக் குறை ஏற்படுத்தும் பழக்கங்களின் மீது ஒவ்வாமை கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு பாமகவின் தலைவராக உயர்ந்திருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு என் வாழ்த்து” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூக நீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திருவேற்காட்டில் நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழுவின் தீர்மானத்தில், “பல்வேறு நெருக்கடி காலக்கட்டத்தில் கட்சிக்கு தலைமை தாங்கி, பாமக என்னும் கப்பலை திறமையாக வழிநடத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி, கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்திச் சென்ற ஜி.கே.மணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசை ஒருமனதாக தேர்வு செய்கிறது" என்று கூறப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x