

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று அறிவித்தார்.
இதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நேரலை இங்கே:
இந்தி சிலையின் கீழே 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை:
இந்த 5 வாசகங்களும் சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ளன.
இதைத்தவிர்த்து சிலை திறப்பு விழாவை முன்னிட்டு கருணாநிதியின் நினைவிடம் " ஊருக்காக வாழ்ந்தவர் சிலையானார், உழைப்பின் கைகளால் உயிரானார்" என்ற வாசகத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
துரைமுருகன் உருக்கம்:
இதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "ஓமந்தூரார் வளாகத்தில் சட்டப்பேரவையை செங்கல், செங்கல்லாக செதுக்கியவர் மு.கருணாநிதி. நம்மைப் பொறுத்தவரை இந்நாள் ஒரு பெருநாள். கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது. சிலையைப் பார்த்துவிட்டு கண்ணீர் விடாமல் வெளியே வரமுடியவில்லை. நேரில் பார்ப்பதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் சிலை வைக்க பொருத்தமான இடத்தை தேர்வு செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறார் முதல்வர். அண்ணா சாலையில் காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு அடுத்து தற்போது கலைஞரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வரலாற்றில் இடம்பிடித்து இருக்கிறார் குடியரசு துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு" என்று பேசினார்.
பிற மொழிகளை திணிக்க கூடாது: வெங்கய்ய நாயுடு
கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு விழா பேருரையாற்றினார். இந்த உரையில், "கருணாநிதி சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் ஆற்றல் வாய்ந்தவர்களில் முதன்மையானவர் கலைஞர். அடித்தட்டு மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டவர் கலைஞர். மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர்.
ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. சமூக நீதிக்காக பாடுபட்டவர் கருணாநிதி. கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர் கருணாநிதி. மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர் மு.கருணாநிதி
கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எனது மாணவர் பருவத்தில் இருந்தே அண்ணா, கருணாநிதியின் பேச்சை கேட்டுள்ளேன். நான் அவருடன் கலந்துரையாடி இருக்கிறேன். கருணாநிதியின் சிந்தனையால் இளம் வயதிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
சென்னை என் மனதுக்கு நெருக்கமானது. அரசியலில் இருந்தபோது கருணாநிதியுடன் நீண்ட காலம் பயணித்துள்ளேன். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது. அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மக்களுக்காக உழைப்பதால் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது பார்வைக்கு சமமானது. பார்வை இழந்தால் எப்படி எதுவும் தெரியாதோ, அதுபோன்ற நிலையே தாய் மொழியை இழந்தால் ஏற்படும். தாய்மொழியை போற்ற வேண்டும். வளர்க்க வேண்டும். எங்கு சென்றாலும் பிறந்த ஊரையும், தாய்மொழியையும் யாரும் மறக்கக்கூடாது.
பிற மொழிகளை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம்; நம் மொழியை ஆதரிப்போம். பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது. எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது. நீங்கள் இந்தியாவின் சக்தி வாய்ந்த முதல்வர்களில் ஒருவர் (மு.க.ஸ்டாலின்). இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி" என்று பேசினார்.
கருணாநிதி குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் மையமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 5 முறை தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். கதை, கவிதை, புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், நாடகம் என, தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனிப் பெருந்தலைவராக வலம் வந்தவர் கருணாநிதி.
இந்தியாவுக்கே பல முன்னோடித் திட்டங்களை தந்தவர். நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களை போற்றி திருவுருவச் சிலைகளும், அழகிய மணிமண்டபங்களும் அமைத்தவர். ஏழை எளியோர் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர். இளம் வயது தொடங்கி, இறப்பிலும் போராடி வெற்றி கண்டவர். எந்நாளும் இறவாப் புகழுக்கு சொந்தமானவர். உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர். மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளவர் கருணாநிதி.