Published : 28 May 2022 05:01 PM
Last Updated : 28 May 2022 05:01 PM

டெல்டா மாவட்டங்களில் அதிரடி சோதனை: ரூ.62.34 லட்சம் மதிப்பிலான 124 மெட்ரிக் டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் உள்ள 83 அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும், 189 தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து, உடனடியாக ரூ.62.34 லட்சம் 124 மெட்ரிக் டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 19 நாட்கள் முன்னதாகவே, அணை திறக்கப்பட்டுள்ளதால், குறுவை நெல் சாகுபடி பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குறுவை நெல் சாகுபடிக்கு தரமான நெல் விதைகள் விநியோகிப்பதை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்குத் தரமான விதை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகள் கிடைப்பதை உறுதி செய்திட, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களைத் தீவிரமாக ஆய்வு செய்திட, ஆறு சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது. இச்சிறப்பு ஆய்வுக் குழுக்கள் டெல்டா மாவட்டங்களில் 83 அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும் 189 தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், விதை விற்பனையாளர்களின் விதை உரிமம், விதை இருப்பு பதிவேடு, தரமான விதைகளை கொள்முதல் செய்த விவரப்பட்டியல், விதைக்குவியலில் விதை மாதிரி எடுத்து, முளைப்புத் திறன் பரிசோதனை செய்தல், தனியார் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் அறிவிக்கை செய்யப்படாத நெல் இரகங்களின் விதை ஆய்வு முடிவுகளைச் சரிபார்த்தல், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது, விற்பனை ரசீது வழங்குவது குறித்த பல்வேறு காரணிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

விதை இருப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்கப்படாதது, விதை முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விதைச் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக ரூ.62.34 லட்சம் மதிப்பிலான 124 மெட்ரிக் டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 240 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை விரைவில் பெற்று அதற்கேற்ப துறை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

விதை தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால், டெல்டா மாவட்ட விவசாயிகள் விதை ஆய்வு துணை இயக்குநர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்படி சென்னை (97861 31461), புதுக்கோட்டை (9360999666), திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை (7708106521)
கடலூர் (9080048219), திருச்சி, அரியலூர் (9443645845) ஆகிய எண்ணிகளில் தகவல் தெரிவிக்கலாம்.

விவசாயிகளின் நலனின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள இவ்வரசு விவசாயிகளுக்குத் தரமான விதை கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x