Last Updated : 28 May, 2022 01:57 PM

 

Published : 28 May 2022 01:57 PM
Last Updated : 28 May 2022 01:57 PM

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம்: நாராயணசாமி

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம் என்றும், பாஜகவின் கை பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், கச்சத்தீவை மீட்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக மத்திய அரசு வைக்க வேண்டும், கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதமர் செல்லும்போது அவரிடம் முதல்வர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம்.

ஆனால், பாஜகவை சேர்ந்தவர்கள் இதனை பெரிதுபடுத்தி விமர்சனம் செய்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு திட்டங்களை நிறைவேற்றினால்தான் நாடு வளர்ச்சி பெறும். முதல்வர் என்ற முறையில் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக தன்னுடைய கடமையை செய்துள்ளார். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

புதுச்சேரி அரசானது மின் விநியோகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தது உறுதிபட்டுள்ளது. மின்துறை தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தபோது, அதனை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம்.

இப்போது பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததால் முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து கையெழுத்து பெற்றுள்ளார்கள். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணம் உயர்வதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். மற்ற மாநிலங்களில் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்ட பிறகு எந்த நிலை இருக்கிறது என்பதை பார்த்து, அதன்பிறகு தொழிலாளர்களிடம் கலந்து பேசி அரசு முடிவு எடுக்கும் என்று முன்பு சொன்ன முதல்வர், இப்போது வாயை மூடிக்கொண்டு அந்த கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

இதிலிருந்து முதல்வர் எவ்வளவு பலவீனமாக உள்ளார்கள். பாஜக எப்படி ரங்கசாமியை ஆட்டிப்படைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம். மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் காலதாமதம் ஆனதற்கு கிரண்பேடியும், அதிகாரிகளும்தான் காரணம். இப்போது ஏதுவான துணைநிலை ஆளுநர், சாதகமான அதிகாரிகள் இருக்கிறார்கள். நிதி இருக்கிறது. ஓராண்டு காலமாக ஆட்சியில் இருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது புதிய சைக்கிளை விட்டதை தவிர வேறான்றும் செய்யவில்லை. எங்களுடைய ஆட்சியை பற்றியும், திட்டங்களை பற்றியும் குறை சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் - பாஜக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்ட ஆலைகளை திறப்போம் என்றார்கள். ஆனால் அது நடந்தபாடில்லை.

தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட ஊதியம் வழங்கப்படவில்லை. இப்படிப்பட்ட ஓர் அவலமான ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி தலைமையில் அரங்கேறி கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறோரா, அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக ஆகிவிடும். மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதற்கு காரணம், அமைச்சரவையில் ஊழல் இருப்பதால் அதிகாரிகளும் ஊழல் செய்கிறார்கள்.

இதனால் மாநில வளர்ச்சி தடைபடுகிறது. மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியவில்லை. மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தர இவர்களுக்கு தெம்பு, திராணி இல்லை. பாஜகவின் கை பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார். பொருளாதார வளர்ச்சி குறைந்து வேலைவாய்ப்பு இல்லாத ஒரு நிலை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இது மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x