Published : 28 May 2022 06:39 AM
Last Updated : 28 May 2022 06:39 AM
சென்னை: தமிழக வருகையை மறக்கவே முடியாது என்று ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி, கலகலப்புடன் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேசியது அனைவர் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நெடுஞ்சாலை, ரயில்வே துறையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்தார்.
அங்கு பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், அவருக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தொகுக்கப்பட்ட ‘சிலப்பதிகாரம்’ ஆங்கில நூலை வழங்கினார். ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவிஉள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். அப்போது, அண்ணாமலை அருகில் வந்த மோடி அவரது தோளை தட்டி, ‘‘அண்ணாமலை, நலமுடன் இருக்கிறீர்களா’’ என்று நலம் விசாரித்தார். அதற்கு, அண்ணாமலை மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார். பின்னர், நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா முடிந்து பிரதமர் புறப்பட்டபோது, தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதியை பார்த்து, “அனைத்தும் நலமா? ஏன் உங்கள் தலைமுடி நரைத்துவிட்டது?’’ என்று கேட்டுள்ளார். பிரதமரின் அன்பால் நெகிழ்ந்த நாராயணன் திருப்பதி என்ன கூறுவது என்று தெரியாமல் சிரித்தபடி அமைதியாக நின்றார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, “பிரதமரின் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நெகிழ்ச்சி அடைந்தேன்’’ என்றார்.
விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் நேற்று இரவு 8.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு, பிரதமர் மோடியை அல்லயன்ஸ் வி.சீனிவாசன் சந்தித்தார். அப்போது, பாரத மாதாவுக்கு பிரதமர் எழுதிய கடிதங்களின் தொகுப்புகள் அடங்கிய ‘அன்னையின் திருவடிகளுக்கு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை பிரதமரிடம் வழங்கினார். அந்த புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து அல்லயன்ஸ் வி.சீனிவாசனிடம் கேட்டபோது, “பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தபோது, நாட்டின் நிலை தொடர்பான தனது எண்ணங்களை பாரதமாதாவுக்கு கடிதமாக எழுதினார். அவர் எழுதிய சில கடிதங்கள் காணாமல் போய்விட்டன. அவரது நண்பர் ஒருவர்தான் எஞ்சியுள்ள கடிதங்களை தொகுத்து வைத்தார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டில் முதல்முறையாக, பிரதமர் மோடி எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, குஜராத்தி மொழியில் புத்தகமாக வெளிவந்தது. அதே ஆண்டு ஆங்கிலத்திலும் வெளிவந்தது.
அவரிடம் அனுமதி பெற்று, அந்த புத்தகத்தை ‘அன்னையின் திருவடிகளுக்கு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளோம். அதை தற்போது பிரதமர் வெளியிட்டுள்ளார். பிரதமருடனான இந்த சந்திப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது’’ என்றார்.
தமிழக வருகை குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "நேற்றைய வருகையை மறக்கவே முடியாது. தமிழகத்துக்கு நன்றி’ என்று குறிப்பிட்டு, உற்சாக வரவேற்பை தொகுத்து வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT