

சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலை அருகே லெட்டான்ஸ் சாலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வீடு உள்ளது. இவர் கடந்த 20-ம் தேதி குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். இவரது வீடு 3 தளங்களை கொண்டது.
தரை தளத்தில் அலுவலகமும், முதல் மற்றும் 2-வது தளத்தில் வீடும் உள்ளது. அலவலக உதவியாளர் இம்மானுவேல் தினமும் அலுவலகத்துக்கு வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலையில் அலுவலகத்துக்கு வந்த இம்மானுவேல், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மாடிக்கு சென்று பார்த்தபோது, இரண்டு தளங்களிலும் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்துக்கு இம்மானுவேல் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து விசாரணை நடத்தி, கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்துள்ளனர். பால்கனகராஜுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் முறைப்படி புகாரும் கொடுத்தார். ரூ.50 ஆயிரம், ஒரு லேப்-டாப், 2 செல்போன், ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஒரு வாட்ச் உட்பட மொத்தம் 4 வாட்ச்கள், ஒன்றரை பவுன் கம்மல், பட்டு புடவைகள் மற்றும் சில பொருட்கள் திருடு போயிருப்பதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆர்.சி.பால்கனகராஜ் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் 2 திருடர்கள் வந்து, கதவுகளை கடப்பாறை கம்பியால் உடைத்து, பொருட்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது. இதில் ஒரு நபரின் உருவம் மட்டுமே கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த நபர் பாதி வழுக்கை தலையுடன் வடமாநிலத்தை சேர்ந்தவர் போன்று இருக்கிறார். அந்த புகைப்படத்தை வைத்து முதல்கட்ட விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
ரூ.15 லட்சம்
திருட்டு சம்பவம் குறித்து ஆர்.சி.பால்கனகராஜ் கூறும்போது, “என் வீட்டில் 6 கதவுகள், 9 பீரோக்களை உடைத்து விட்டனர். நகைகளை லாக்கரில் வைத்திருந்ததால் தப்பி விட்டன. எனது தாயார் விமலா ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது 30 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டிலுக்கு அடியில் இருந்த ரகசிய அறையில் வைத்திருந்தார். பீரோவில் இருந்த பொருட்களை கட்டிலின் மேலே போட்டு தேடிய திருடர்கள், கட்டிலின் அடியில் பார்க்கவில்லை.
இதனால் 30 பவுன் நகைகளும் தப்பிவிட்டன. வெளியூர் செல்லும்போது அருகே உள்ள காவல் நிலையத்தில் கூறாமல் சென்றது எனது தவறுதான். வீட்டின் 6 வாசல் கதவுகளையும் உடைத்து விட்டனர். இதை சரிசெய்யவே ரூ.15 லட்சம் செலவாகும். மேலும் என்னென்ன திருடு போயுள்ளது என்று தெரியவில்லை" என்றார்.