Published : 28 May 2022 07:05 AM
Last Updated : 28 May 2022 07:05 AM

சென்னை உயர் நீதிமன்றம் போல மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் அறிவுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடந்த நீதிமன்றக் கட்டிட திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பேசினார். உடன் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, கயல்விழி செல்வராஜ் மற்றும் நீதிபதிகள். படம்: இரா.கார்த்திகேயன்

சென்னை உயர் நீதிமன்றத்தைபோல மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்திஉள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம், நீதித்துறை அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் உடுமலை கூடுதல் மாவட்ட நீதிமன்ற கட்டிடங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி நேற்று திறந்துவைத்தார். திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் வரவேற்றார்.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், பி.டி.ஆஷா,ஓய்வுபெற்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம், சட்ட அமைச்சர் ரகுபதி,ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும்மாவட்ட நீதிபதிகள் பங்கேற்றனர்.

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி பேசியதாவது:

வழக்குகளை விரைந்து முடிப்பதில், நாட்டிலேயே முன்னோடி நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.

கடந்த மாதம் நடந்த நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, நீதிமன்றத்தை நாடி வரும் மக்களுக்குகாலம் தாழ்த்தாமல் நீதியை பெற்றுத் தர வேண்டும் என்றார்.அதை சென்னை உயர் நீதிமன்றம்செய்து வருகிறது. இதேபோல, மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, ‘‘நீதித் துறைசிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற அக்கறை உள்ளவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதால், பல்வேறு இடங்களில் கூடுதலாக நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக முதல்வர் உயர்த்தியுள்ளார்” என்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வி.புகழேந்தி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x