

தேனி: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) ரோபோ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பின் நிலைய மேலாண்மைக் குழு சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தார்.
கணினி, பொறியியல், மின்னியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டு மாணவர்களிடம் பேசினார். கடிதம், சுயவிவரம் போன்றவற்றை தாங்களே டைப்செய்ய பழகிக்கொள்ள வேண்டும் என்று கணினிப் பிரிவு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலாண்மைக் குழுத் தலைவர் வி.அரவிந்த் மாணவர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், உள்கட்டமைப்பு திறன் குறித்து இயக்குநரிடம் விளக்கினார். பின்னர்,செய்தியாளர்களிடம் இயக்குநர்கே.வீரராகவ ராவ் கூறியதாவது:
தமிழகத்தில் 91 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.புதிதாக மேலும் 11 நிலையங்கள்தொடங்கப்படுகின்றன. ஆண்டுக்கு24 ஆயிரம் பேர் தொழிற்பயிற்சி பெறுகின்றனர். மாநிலம் முழுவதும்54 பொறியியல் படிப்புகளும், 24பொறியியல் அல்லாத பிரிவுகளும் உள்ளன. இங்கு படித்தவர்களில் 89 சதவீதம் பேர் தொழிற்சாலை பணிகளுக்கு செல்கின்றனர். வளாகத் தேர்வு மூலம் 75% பேருக்குஉடனடி வேலை கிடைக்கிறது.
விரைவில் ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் 71 பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில்ரோபோ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையிலான பயிற்சிகளும் அளிக்கப்படும். தேனி ஐடிஐ மேம்பட்டஉள்கட்டமைப்புடன் சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
முதல்வர் வி.சேகரன் வரவேற்றார். மேலாண்மைக் குழுத் தலைவர் வி.அரவிந்த் வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சொந்த நிதியில் இருந்து வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு வாழ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது. மண்டல இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன், நிர்வாக அதிகாரி உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.