

மத்தியில் பாஜக ஆட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவை தமிழகத்தில் 15 நாட்களுக்கு கொண்டாட உள்ளதாக அக்கட்சி யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவுற்று 3-ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி சென்னை தி.நக ரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, மத்திய அரசின் 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய புத்தகத்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட, கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
பாஜக அரசு 2 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள் ளது. பிரதமர் மோடி ஓய்வின்றி மக்களைப் பற்றியே சிந்தித்த வண்ணம் உள்ளார். நாட்டின் 60 சதவீதம் மக்கள் மோடி அரசில் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள் ளனர். காங்கிரஸ் கட்சி தனது 10 ஆண்டுகால சாதனைகளை சொல்லாமல், பாஜக அரசை விமர்சித்து குறும்படங்களை வெளியிட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை சொன்னாலும் மக்களிடம் இருந்து மோடியை பிரிக்க முடியாது.
மத்திய பாஜக ஆட்சியின் 3-ம் ஆண்டு தொடக்கத்தை தமிழகத்தில் 15 நாட்களுக்கு கொண்டாட உள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் 7 மத்திய அமைச் சர்கள் கலந்துகொள்கின்றனர். சென்னை தி.நகரில் நாளை (இன்று) நடக்கும் நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்கிறார். மதுரையில் வரும் 30-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்கவுள்ளார்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.