Published : 28 May 2022 06:39 AM
Last Updated : 28 May 2022 06:39 AM
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் 5 வழித் தடங்களின் முழுமையான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆலந்தூர்-கோயம்பேடு இடையே செயல்படுத்தப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது விம்கோ நகர் பணிமனை-விமான நிலையம், சென்னை சென்ட்ரல்-பரங்கிமலை இடையேயும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த இருவழிப் பாதையை இணைக்கும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரயில் நிலையங்கள் திகழ்கின்றன. மேலும், இந்த இருவழி தடத்திலும் 40 ரயில் நிலையங்கள் உள்ளன.
3-வது வழித்தடமாக மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையேயும், 4-வது வழித்தடமாக மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையேயும், 5-வது வழித்தடமாக பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையேயும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித் தடத்தில் 50 ரயில் நிலையங்களும், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 42 ரயில் நிலையங்களும், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே 30 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில்களில் தற்போது தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், 2-ம் கட்டமாக ரூ.61,843 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்பணிகள் நிறைவடைந்தால் 5 வழித்தடங்களிலும் 173 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இந்நிலையில், 5 வழித் தடங்களின் முழு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT