முதல்வராக பதவியேற்பு: ஜெயலலிதாவுக்கு வேல்முருகன் வாழ்த்து

முதல்வராக பதவியேற்பு: ஜெயலலிதாவுக்கு வேல்முருகன் வாழ்த்து
Updated on
1 min read

6-வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி பண்ருட்டி தி.வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதாவுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தின் வாழ்வுரிமைக்காக, தமிழர் நலனுக்காக நல்லாட்சியை வழங்கியவர் ஜெயலலிதா. இந்த வியத்தகு சாதனைக்காகவே தமிழ மக்கள் மீண்டும் அவரை அரியாசனத்தில் அமர வைத்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது; 7 தமிழர் விடுதலைக்கான உறுதியான நடவடிக்கைகள், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த தீர்மானம் என தமிழினத்தின் நலன் சார்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஜெயலலிதா இனி வரும் 5 ஆண்டுகாலமும் அதேபோல் தமிழகத்தின், தமிழினத்தின் உரிமைகளை பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் அவரது பயணம் தொடர வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் பெரும் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

தமிழினத்தின் நலனுக்காக அவர் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

பெரும் வெற்றி சரித்திரம் படைத்து 6-வது முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்கும் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in