

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி திட்டம் மற்றும் தடுப்பூசியால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு திட்ட பயிலரங்கத்தில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகள் PICME 2.0 இணையதளத்தில் தங்கள் கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்து RCH எண் பெறும் வசதியை தொடங்கி வைத்தார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகளைப் பயன்படுத்தி, தடுப்பூசியால் தடுக்கப்படக் கூடிய 12 நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 9.31 லட்சம் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 10.21 லட்சம் கர்ப்பிணிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் 99 சதவீத சாதனையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டதால் 2004 முதல் போலியோ இல்லாத நிலை நீடிக்கிறது. ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் போன்ற நோய்கள் மற்றும் தட்டம்மை நோய் பரவலும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
போலியோ நோயை பொருத்த வரையில் பி1, பி3 வகை வைரஸ்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன. தற்போது உலக அளவில் பி2 வகை வைரஸை ஒழிப்பதற்காக தீவிர கண்காணிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது.
PICME என்ற இணையதளம் ஏப்ரல் 2008-ல் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகளின் விவரங்கள் கர்ப்பப்பதிவு முதல் குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை பதிவு உள்ளது.
தாய்மார்களுக்கு RCH எண் என்ற ஒரு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை பயன்படுத்தி தாயின் விவரங்களை இணையதளம் மூலம் காணலாம். தமிழக அரசின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தாய்மார்களுக்கு RCH எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது கிராம சுகாதார செவிலியர் மூலம் கர்ப்பப் பதிவு செய்து RCH எண் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயனாளிகளிடம் இருந்து நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தாய்மார்கள் RCH எண் பெறுவதை மேலும் எளிதாக்கும் பொருட்டு PICME 2.0 இணையதளத்தில் (https://picme.tn.gov.in/picme_public) கர்ப்பிணிகள் தாங்களே சுயமாக பதிவு செய்து RCH எண் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
PICME இணையத்தில் கர்ப்பிணிகளின் விவரங்கள் கர்ப்பப்பதிவு முதல் குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை பதிவு உள்ளது.