

சென்னை: இந்துக்களின் உரிமைகளை மீட்க தமிழகம் முழுவதும் ஜூன் 28-ம் தேதி முதல் பிரச்சாரப் பயணத்தை தொடங்க உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:
இந்துக்களின் உரிமைகளை மீட்கும் பிரச்சாரப் பயணம் வரும் ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடங்கும் பிரச்சாரப் பயணம் சென்னையில் நிறைவு பெறுகிறது. தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில், 34 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் 80 சதவீதத்துக்கு மேலாக இந்துக்கள் இருக்கின்றனர். ஆனால், இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அந்த உரிமையை மீட்பதற்காக இந்தப் பயணம் தொடங்கப்பட உள்ளது.
இந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், கோயில்களில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, நூற்றாண்டுகள் பழமையான 100-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன.ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கோயில்களை மட்டும் இடிக்கின்றனர். ஆனால், ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள், அரசுக் கட்டிடங்களை இடிப்பதில்லை.
எனவே, இந்துக் கோயில்கள், அவற்றின் சொத்துகளைப் பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும். மதப் பாகுபாடு இல்லாமல் அரசின் சலுகைகள், உதவிகள் இந்துக்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்த உள்ளோம். திமுக, அதிமுக என்ற இரு ஆட்சிகளும் இந்துக்களுக்கு எதிராகத்தான் உள்ளன.
சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும், பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.